Published : 08 Nov 2023 06:18 AM
Last Updated : 08 Nov 2023 06:18 AM

ODI WC 2023 | இங்கிலாந்து - நெதர்லாந்து இன்று மோதல்

பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. அந்த அணி விளையாடி உள்ள 7 லீக் ஆட்டங்களில் 6 தோல்வி, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சிய இரு ஆட்டங்களிலும் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெறும் நோக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கக்கூடும்.

ஏனெனில் வரும் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகளுடன் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் நேரடியாக தகுதி பெறும். இந்தவகையில் இங்கிலாந்து அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் கணிசமான ரன் ரேட்டில் வெற்றி பெறுவது அவசியம். அப்போதுதான் புள்ளிகள் பட்டியலில் 8 இடங்களுக்குள் நிலைபெற முடியும்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஆக்ரோஷ அணுகுமுறையால் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி இம்முறை மோசமான செயல் திறனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பலம் குறைந்த அணிகளிடம் கூட தோல்வியை சந்தித்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தும் இங்கிலாந்து அணிக்கு சவால் தரக்கூடும் என்றே கருதப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் ஆகியோர் தடுமாறி வருகின்றனர். ஜோ ரூட்டும் தொடர்ச்சியான செயல் திறனை வெளிப்படுத்துவது இல்லை. ஜாஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் பார்மின்றி தவித்து வருகின்றனர். பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கி வரும் பென் ஸ்டோக்ஸிடம் இருந்தும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டுமானால் ஒட்டுமொத்த பேட்டிங் துறையும் எழுச்சி காண வேண்டும்.

நெதர்லாந்து அணியும் அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த அணி 7 ஆட்டங்களில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறுவதில் முனைப்பு காட்டக்கூடும். ஆல்-ரவுண்டர்கள் நிறைந்த அந்த அணி, பெரிய அளவிலான தொடரில் தங்களாலும் கணிசமான வெற்றிகளை பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளது. ஏனெனில் வலுவான தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த நெதர்லாந்து அணியானது, வங்கதேச அணிக்கு எதிராகவும் வெற்றியை பதிவு செய்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x