Published : 07 Nov 2023 06:14 PM
Last Updated : 07 Nov 2023 06:14 PM
மும்பை: வான்கடே ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஸத்ரன் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். இப்ராகிம் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் விளாசியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது ஆப்கானிஸ்தான். அதன்படி, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹ்மத் ஷா 30 ரன்கள், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 26 ரன்கள், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 22 ரன்கள், மொகமது நபி 12 ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். என்றாலும், இப்ராகிம் ஸத்ரன் பொறுப்புடன் விளையாடினார்.
நடப்பு உலகக் கோப்பை ஆப்கானிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் வீரராக இருந்து வருகிறார் ஸத்ரன். இன்றைய போட்டியிலும் தனது அசத்தலான ஃபார்மை தொடர்ந்தார். ஸ்டார்க், ஹேசில்வுட் மற்றும் கம்மின்ஸ் போன்ற ஆஸ்திரேலியாவின் லெஜெண்ட் பவுலர்கள் பந்துவீச்சை எளிதாக சமாளித்த அவர், சீரான இடைவெளியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசவும் தவறவில்லை. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 44வது ஓவரில் தனது முதல் உலகக் கோப்பை சதத்தை பதிவுசெய்தார். 131 பந்துகளில் அவர் சதத்தை எட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸத்ரன் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 129 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக, 2015 உலகக் கோப்பையில், ஸ்காட்லாந்துக்கு எதிராக சமியுல்லா ஷின்வாரி 147 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தே ஆப்கன் வீரர் உலகக் கோப்பையில் எடுத்த அதிக ரன்களாக இருந்தது. இன்று அதனை முறியடித்தார் ஸத்ரன். மேலும் இவர், குறைந்த வயதில் உலகக் கோப்பை சதம் அடித்தவர்களின் பட்டியலில் அயர்லாந்தின் பால் ஸ்டெர்லிங், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோரைத் தொடர்ந்து நான்காவது இளம் வீரராக இடம்பிடித்தார். 21 வயது மற்றும் 330 நாட்களில் சதம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT