Published : 07 Nov 2023 06:00 AM
Last Updated : 07 Nov 2023 06:00 AM
கொல்கத்தா: நான் ஒருபோதும் சச்சின் டெண்டுல்கராக இருக்க முடியாது எனவும், தனது ஹீரோவான அவரின் சாதனையை சமன் செய்தது சிறப்பான விஷயம் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். தனது 35-வது பிறந்த நாளில் சதம் விளாசிய விராட் கோலி, அதிக சதங்கள் விளாசிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை சமன் செய்தார்.
இதைத் தொடர்ந்து விராட் கோலிக்கு பாராட்டுகள் குவிந்தன. சச்சின் டெண்டுல்கரும் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். சச்சின் தனது பதிவில், “சிறப்பாக விளையாடினீர்கள் விராட் கோலி. நான் 49-ல் இருந்து 50-க்கு (சதம்) செல்வதற்கு 365 நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் நீங்கள் 49 என்ற சதத்திலிருந்து 50-வது சதத்துக்கு இன்னும் சில நாட்களில் செல்வீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருந்தார்.
போட்டி முடிவடைந்ததும் சாதனை சதம் குறித்து விராட் கோலி கூறியதாவது:
எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்தது சிறப்பான விஷயம். பேட்டிங் என்று வரும் போது சச்சின் கச்சிதமாக செயல்படுவார். ஆனால் நான், அவரை போன்று ஒருபோதும் இருக்கப் போவது இல்லை. இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம், நான் எங்கிருந்து வருகிறேன் என்று எனக்குத் தெரியும். சச்சினை நான், டிவியில் பார்த்த நாட்கள் எனக்குத் தெரியும், அவரிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவதில் நிறைய அர்த்தங்கள் உள்ளது.
நான் கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். இதை கடவுள் எனக்கு வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். களத்தில் பல ஆண்டுகளாக நான் செய்ததை தற்போதும் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்,
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டம் பெரிய போட்டி. அவர்கள், இந்தத் தொடரில் வலுவான அணியாக இருந்தார்கள். இதுவே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. என் பிறந்த நாளில் இந்த சதம் அமைந்ததால் இதை எனக்கு ரசிகர்கள் சிறப்பாக்கியுள்ளனர்.
வெளியில் இருந்து பார்ப்பவர்கள் விளையாட்டை சற்று வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாகத் தொடங்கும் போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதாக நினைக்கிறார்கள்.
ஆனால் நிலைமைகள் அதன் பின்னர் வெகுவாக மாறியது. 315 ரன்களுக்கு மேல் சென்றதும், சராசரிக்கும் அதிகமான ரன்களை பெற்றதாக உணர்ந்தோம்.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT