Published : 07 Nov 2023 12:11 AM
Last Updated : 07 Nov 2023 12:11 AM
மொகாலி: நடப்பு சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பரோடோ அணியை 20 ரன்களில் வீழ்த்தியது பஞ்சாப் அணி. இதன் மூலம் முதல் முறையாக இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அன்மோல்பிரீத் சிங் விளாசிய சதம் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவியது.
சண்டிகரில் உள்ள மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பரோடா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அன்மோல்பிரீத் சிங், 61 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். நேஹல் வதேரா, 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பரோடா அணி விரட்டியது. அபிமன்யு சிங் 61 ரன்கள், நினத் ரத்வா 47 ரன்கள், க்ருணல் பாண்டியா 45 ரன்கள், விஷ்ணு சோலங்கி 28 ரன்கள் எடுத்தனர். இருந்தும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது பரோடா. அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
அன்மோல்பிரீத் சிங், ஆட்ட நாயகன் விருதை வென்றார். அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார். வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT