Published : 06 Nov 2023 08:00 PM
Last Updated : 06 Nov 2023 08:00 PM

ODI WC 2023 | இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி சாத்தியமா?

தென் ஆப்பிரிக்காவை நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி வீழ்த்தியதையடுத்து இந்தியா 16 புள்ளிகளுடன் ராஜநடை போட்டு வருகின்றது. தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடனும், நியூஸிலாந்து 8 புள்ளிகளுடனும் முதல் 4 இடங்களில் இருக்க, பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அதிகம் காரணமாக ஆப்கனைக் காட்டிலும் ஒரு இடம் முன்னேறி 5-ம் இடத்தில் உள்ளது.

அன்று நியூஸிலாந்தின் 403 ரன்கள் இலக்கை விரட்டியபோது பகர் ஜமானின் காட்டடி சதத்தின் மூலம் 200/1 என்று அதிரடியாக ஆடி, மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் முன்னிலைப் பெற்று வெற்றிபெற்றது. இந்த சம்பவம் 1992 உலகக் கோப்பையை பலருக்கும் நினைவூட்டுகிறது. நியூஸிலாந்து அந்த உலகக் கோப்பையிலும் அருமையாக ஆடிவர அரையிறுதியில் இன்சமாம் உல் ஹக்கின் அருமையான இன்னிங்ஸ் மூலம் தோல்வி கண்டது. அன்று இன்சமாம் 37 பந்துகளில் 60 ரன்களை விளாச 262 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி நியூஸிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். அந்த உலகக் கோப்பையில் வரிசையாக வெற்றிகண்ட நியூஸிலாந்து இருமுறை பாகிஸ்தானிடம் மட்டும் தோல்வி காண கோப்பைக் கனவு தகர்ந்தது. அதேநேரம், சில போட்டிகளில் தோல்வி கண்ட பாகிஸ்தான் கடைசியில் இம்ரான் தலைமையில் கோப்பையை வென்றது.

இப்போதும் நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்து பாகிஸ்தான் வெற்றிபெற்றதால் பாகிஸ்தான் ‘டார்க் ஹார்ஸ்’ ஆகி மீண்டும் கோப்பையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக பலரும் கருதுகின்றனர். முதலில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும். அப்படி தகுதி பெற்றால் இந்தியாவுடன் அரையிறுதி வாய்ப்பு ஏற்பட்டால் அவர்களுக்குக் கடினம்தான். இந்த வாய்ப்புகளைப் பற்றி பார்ப்போம்:

இப்போது தென் ஆப்பிரிக்கா 8 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 7 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை 2 அல்லது 3ம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. இன்னும் 2 போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு இருக்கின்றது. ஒன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செவ்வாய்க் கிழமை நடைபெறுகிறது. அடுத்து சனிக்கிழமை வங்கதேசத்துக்கு எதிராக ஆடவுள்ளது.

ஆகவே 4-ம் இடத்துக்கான போட்டி இப்போது நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு இடையே உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட வேண்டும். அதில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா என்பது சொல்ல முடியாத ரெண்டக நிலையில் உள்ளது. புள்ளிப் பட்டியலில் 4ம் இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதி சாத்தியங்கள்: பாகிஸ்தான் அணி தன் கடைசி லீக்கில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 11ம் தேதி பங்கேற்கிறது. அதற்கு முன்னரே நியூஸிலாந்து நவம்பர் 9ம் தேதி இலங்கைக்கு எதிராக தங்கள் கடைசி லீக் போட்டியில் ஆடுகிறது. இதில், ஒருவேளை இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து தோல்வியுற்று, பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால் பாகிஸ்தான் 10 புள்ளிகளுக்கு சென்றுவிடும். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இரு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்பதை பாகிஸ்தான் நிச்சயம் பிரார்த்திக்கும்.

அப்படி இல்லை, ஆப்கானிஸ்தான் இரண்டில் ஏதேனும் ஒரு போட்டியில் வென்றுவிட்டால் பாகிஸ்தானுடன் 10 புள்ளிகள் பெற்று மல்லுக்கு நிற்கும். அப்போது நெட் ரன் ரேட் தீர்மானிக்கும். இப்போதைக்கு ஆப்கானிஸ்தான் நெட் ரன் ரேட் மைனஸில் உள்ளது. பாகிஸ்தான் நெட் ரன் ரேட் +0.036-ல் உள்ளது. எனவே பாகிஸ்தான் முன்னேறவே வாய்ப்பு. ஒருவேளை நடக்க முடியாதது நடந்து ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இரண்டையுமே தோற்கடித்துவிட்டது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால், பேச்சே வேண்டாம் 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

அதேநேரம், நியூஸிலாந்து அணி இலங்கையை வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்றும், பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தி விடும்பட்சத்தில், ஆப்கான் மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோல்வி என்றால் நியூஸிலாந்து, பாகிஸ்தான் இடையே நெட் ரன் ரேட் பிரச்சினை வரும். நியூஸிலாந்தின் நடப்பு ரன் ரேட் +0.398. பாகிஸ்தானுடையது +0.036. இங்கே பாகிஸ்தானுக்கு ஒரு அட்வான்டேஜ். நியூஸிலாந்து ஒரு நாள் முன்னதாகவே ஆடி வெற்றிபெற்றுவிட, ஒருநாள் கழித்து இங்கிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆட்டத்தை சீக்கிரம் முடித்து வெற்றிபெற ஒரு வாய்ப்பு கிடைக்கும். அப்படி வென்றால் அரையிறுதியில் பாகிஸ்தான் நுழையும்.

சரி இன்னொரு (அ) சாத்தியத்தையும் பார்த்து விடுவோம். நியூஸிலாந்து - இலங்கை மேட்ச் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்து வழங்கப்படும். அப்படி நடக்கும்பட்சத்தில், ஒரு புள்ளி பெற்று நியூஸிலாந்து 9 புள்ளிகளில் தேங்க, பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தி விடுகிறது என்றால் 10 புள்ளிகளுடன் இந்தியாவை அரையிறுதியில் பாகிஸ்தானே சந்திக்கும். மாறாக பாகிஸ்தான் மேட்ச், நியூசிலாந்து மேட்ச் இரண்டுமே மழையால் ரத்தானால் நெட் ரன் விகிதம் அதிகமாக இருப்பதால் நியூஸிலாந்து அரையிறுதிக்குச் சென்றுவிடும். ஆகவே, இன்னொரு முறை பாகிஸ்தான் - இந்தியா அரையிறுதியில் மோத வாய்ப்பு உள்ளதா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x