Published : 06 Nov 2023 03:52 PM
Last Updated : 06 Nov 2023 03:52 PM
மும்பை: நாளை நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியை வம்பிழுக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக்.
மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது ஆஸ்திரேலிய அணி. நடப்பு தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கண்ட ஆஸ்திரேலியா, தொடர்ந்து ஐந்து வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் போட்டியை வெல்வது முக்கியம். இதற்கான தீவிர பயிற்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை வம்பிழுக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்.
நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டா பக்கத்தில், "மனித உரிமைகளை காரணம்காட்டி விளையாட மறுத்த ஆஸ்திரேலியா, உலகக் கோப்பையில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதை காண சுவாரஸ்யமாக உள்ளது. மனித உரிமையா அல்லது இரண்டு புள்ளிகளா?" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடுவதில் இருந்து விலகியது. இருநாட்டு தொடரில் விளையாட மறுத்த ஆஸ்திரேலியா தற்போது ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாட சம்மதித்துள்ளதை அடுத்தே, நவீன் உல் ஹக் அவ்வாறு பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை நவீன் உல் ஹக் மட்டுமல்ல, இதற்கு முன்பு ரஷீத் கானும் எதிர்த்திருந்தார். இதற்கு முன்பு ஒரு பேட்டியில், "மார்ச் மாதம் நடைபெற இருந்த இருநாட்டு தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியதைக் கேட்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். உலக அரங்கில் நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். அரசியலில் இருந்து கிரிக்கெட்டை விலக்கி வைக்க வேண்டும்" என ரஷீத் கான் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT