Published : 06 Nov 2023 06:54 AM
Last Updated : 06 Nov 2023 06:54 AM
புதுடெல்லி: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம், இலங்கை அணிகள் மோதவுள்ளன.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இலங்கை அணிஇதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் வங்கதேச அணி 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்விகளுடன் 2 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில்உள்ளது. இதில் வங்கதேச அணிபோட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுவிட்டது. ஏறத்தாழ போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் இலங்கை அணியும் உள்ளது. அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைப் பொறுத்தே இலங்கை அணியின் அரை இறுதி வாய்ப்பு அமையும் என்ற நிலை உள்ளது.
இருப்பினும் அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் தனது இடத்தை அதிகரித்துக் கொள்ள இலங்கை அணி முயற்சிக்கக்கூடும்.
காற்று மாசு அதேநேரத்தில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. டெல்லியில் கடந்த சிலதினங்களாக வழக்கத்துக்கு அதிகமாக காற்று மாசுபாடு அதிகரித்து நகர் முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது.காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு (ஏகியூஐ) 346 ஆகஉள்ளதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.டெல்லியில் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் பலர் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், காற்று மாசு அதிகரிப்பால் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி வரை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை ஆன்லைன் வழியாக நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகரிப்பின் எதிரொலியாக, உலக கோப்பை போட்டிக்கான பயிற்சியில் நேற்று இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்கவில்லை.இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று உலக கோப்பை போட்டி நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போட்டிக்கு முன்பு நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT