Published : 05 Nov 2023 06:59 AM
Last Updated : 05 Nov 2023 06:59 AM

ஈடன்கார்டனில் இன்று பலப்பரீட்சை - இந்தியாவின் வெற்றிக்கு தடை போடுமா தென் ஆப்பிரிக்கா?

கொல்கத்தா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 7 ஆட்டங்களில் விளையாடி தோல்விகளை சந்திக்காமல் 14 புள்ளிகளை குவித்துபுள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியஅணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஏனெனில் மற்ற எந்த அணியும் 16 புள்ளிகளை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. தென் ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியும் அரை இறுதியில் நுழைவது உறுதியாகி உள்ளது.

இதனால் இன்றைய லீக் ஆட்டம் இரு அணிகளுக்குமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னதாக வலுவானமோதல் கொண்ட போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. பவர் ஹிட்டர்கள், ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றும் திறன்கொண்ட வீரர்கள் நிறைந்த தென் ஆப்பிரிக்கஅணியின் பேட்டிங் வரிசை இந்தியாவின் பந்து வீச்சை கடும் சோதனைக்கு உட்படுத்தக்கூடும்.

ஏனெனில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பெரும்பாலான அணிகளுக்கு எதிரான ரன் வேட்டை நிகழ்த்தி உள்ளது. தொடக்க ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க அணி அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 311, இங்கிலாந்துக்கு எதிராக 399, வங்கதேசத்துக்கு எதிராக 382, நியூஸிலாந்துக்கு எதிராக 357 ரன்களை குவித்து வென்றுள்ளது. இந்த 5 ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்திருந்தது.

முதலில் பேட் செய்த ஆட்டங்களில் ரன் வேட்டை நிகழ்த்தி உள்ள தென் ஆப்பிரிக்க அணி இலக்கை துரத்திய இரு ஆட்டங்களிலும் தடுமாற்றம் அடைந்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிராக 246 ரன்களை துரத்திய ஆட்டத்தில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. அதேவேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 271 ரன்கள் இலக்கை போராடி கடைசியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸில் வெற்றி பெற்றால் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்யவே அதிக முன்னுரிமை வழங்கக்கூடும்.

4 சதங்களுடன் 545 ரன்கள் குவித்துள்ள குயிண்டன் டி காக், 2 சதங்களுடன் 353 ரன்கள் சேர்த்துள்ள ராஸி வான் டெர் டஸ்ஸன் ஆகியோரிடம் இருந்துமீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ஒரு சதம், 3 அரை சதங்கள் என 362 ரன்கள் குவித்துள்ள எய்டன் மார்க்ரம், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 61 பந்துகளில் சதம் விளாசிய ஹெய்ன்ரிச் கிளாசன் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவர்களாக உள்ளனர்.

பின் வரிசையில் டேவிட் மில்லர், மார்கோ யான்சன் ஆகியோரும் வலுவான மட்டையாளர்களாக திகழ்கின்றனர். இதில் கிளாசன், எய்டன் மார்க்ரம் ஆகியோர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் தொடுக்கக்கூடியவர்கள். இதனால் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும்.

இந்திய அணியை பொறுத்தவரையில் இலக்கை துரத்திய ஆட்டங்களிலும், இலக்கை பாதுகாத்த ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இடத்தை பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவும், பந்து வீச்சில் அற்புதமாக மொகமது ஷமியும் பூர்த்தி செய்து வருகின்றனர். டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் சீரான செயல் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் பார்முக்கு திரும்பி இருப்பது கூடுதல் வலு சேர்த்துள்ளது.

கடைசி ஆட்டத்தில் இலங்கை அணியை 55 ரன்களில் மட்டுப்படுத்திய மொகமது ஷமி, மொகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு துறை தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளது. ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ் கூட்டணி பவர்பிளேவில் கூட்டாக 10 விக்கெட்களை வீழ்த்தி உள்ளது. 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 14 விக்கெட்களை வேட்டையாடி உள்ள மொகமது ஷமி மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

பிறந்த நாளில் சாதனை?: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்களிலும், நியூஸிலாந்துக்கு எதிராக 95 ரன்களிலும், இலங்கைக்கு எதிராக 88 ரன்களிலும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டார். சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு மேற்கொண்டு ஒரே ஒரு சதம் மட்டுமே தேவையாக உள்ளது. விராட் கோலிக்கு இன்று 35-வது பிறந்த நாள். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், சதம் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்தால் அது ரசிகர்களுக்கு வழங்கும் சிறந்த பரிசாக இருக்கக்கூடும்.

ரோஹித் சர்மாவின் 264: ரோஹித் சர்மாவுக்கு ஈடன் கார்டன் மைதானம் சிறப்பாகவே இருந்துள்ளது. இங்கு அவர், கடந்த 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 264 ரன்கள் விளாசி சாதனை படைத்திருந்தார். இதனால் இம்முறையும் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x