Published : 05 Nov 2023 06:48 AM
Last Updated : 05 Nov 2023 06:48 AM

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘விதி’யால் வென்றது பாகிஸ்தான் அணி

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் பஹர் ஸமான்.

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட நியூஸிலாந்துக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. தனது 3-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் விளாசிய நிலையில் மொகமது வாசிம் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 79 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்த நிலையில் இப்திகார் அகமது பந்தில் வெளியேறினார். 2-வதுவிக்கெட்டுக்கு இந்த ஜோடி 180 ரன்கள் சேர்த்தது.

டேவன் கான்வே 35, டேரில் மிட்செல் 29, மார்க்சாப்மேன் 39, கிளென் பிலிப்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் மொகமதுவாசிம் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஹசன் அலி, இப்திகார் அகமது, ஹரிஸ் ரவூஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 402 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அப்துல்லா ஷபிக் 4 ரன்களில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் கேப்டன் பாபர் அஸம் களமிறங்க பஹர் ஸமான், நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். மழை இடையூறு இருக்கக்கூடும் என கணித்து விளையாடிய பாகிஸ்தான் அணி ரன் ரேட்டில் அதிக கவனம் செலுத்தியது. மட்டையை சுழற்றிய பஹர் ஸமான் 63 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 11-வது சதமாக அமைந்தது.

பாகிஸ்தான் அணி 21.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 10 ரன்கள் அதிகமாகவே பாகிஸ்தான் அணி எடுத்திருந்தது. பஹர் ஸமான் 106, பாபர் அஸம் 47 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 41 ஓவர்களில் 342 ரன்கள் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பேட்டிங்கை தொடர்ந்த பாபர் அஸம் விரைவாக ரன்கள் சேர்த்தார். 52 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5பவுண்டரிகளுடன் தனது 32-வது அரை சதத்தைகடந்தார். பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.

அப்போது பஹர் ஸமான் 81 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 126 ரன்களும், பாபர் அஸம் 63 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கன மழை பெய்ததை அடுத்து போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியதுடன் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை உயிர்ப்பிக்கச் செய்துள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 11-ம் தேதி இங்கிலாந்துடன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது.

நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்தித்துள்ளது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் தொடர்கிறது. நியூஸிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 9-ம் தேதி இலங்கை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் உள்ள தென் ஆப்பிரிக்க அணி 2-வது அணியாக அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஏற்கெனவே இந்திய அணி 14 புள்ளிகளுடன் முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்திருந்தது. இரு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளதை தொடர்ந்து மீதம் உள்ள இரு இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x