Published : 04 Nov 2023 08:10 PM
Last Updated : 04 Nov 2023 08:10 PM
பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நியூசிலாந்து - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிக்கு பஹர் ஸமான் அதிரடி சதம் துணை புரிந்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 401 ரன்களை குவித்தது. இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் - பஹர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் டிம் சவுத்தி வீசிய 2வது ஓவரில் கேட்ச் கொடுத்து அப்துல்லா ஷபிக் 4 ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினார். பாபர் அஸம், பஹர் ஸமானுடன் கைகோக்க ஆட்டம் சூடுபிடித்தது.
விக்கெட்டை பறிகொடுக்காத இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, சிக்சர்ஸ் ஷோ காட்டிய பஹர் ஸமான் 63 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இருவரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 25.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை சேர்த்திருந்தது பாகிஸ்தான். இதில் 11 சிக்சர், 8 பவுண்டரிகள் என 81 பந்துகளில் 126 ரன்களுடன் பஹர் ஸமானும், 63 பந்துகளில் 66 ரன்களுடன் பாபர் அஸம் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து மழை குறுக்கிட, நேரம் ஆக ஆக மழையின் வீரியம் கூடியதால் டக்வொர்த் லூயிச் முறைப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியின் மூலம் பாகிஸ்தான் சில சாதனைகளை படைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பஹர் ஸமான் - பாபர் அஸமின் 194 பாட்னர்ஷிப் தான் உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் அதிகபட்ச பாட்னர்ஷிப். உலகக் கோப்பை போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய பாகிஸ்தான் வீரர் பஹர் ஸமான். நடப்பு போட்டியில் அவர் இதுவரை 18 சிக்சரை விளாசியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தனது அரையிறுதி கனவை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT