Published : 24 Jan 2018 09:27 PM
Last Updated : 24 Jan 2018 09:27 PM
ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்துவரும் 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள வான்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.இந்த போட்டிக்காக இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக ரகானே, புவனேஷ்குமார் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. கே.எல். ராகுல் ரன் ஏதும் சேர்க்காமலும், முரளி விஜய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
3-வது விக்கெட்டுக்கு புஜாரா, கேப்டன் கோலி இணை அணியை சரிவில் இருந்து மீட்டனர். விக்கெட் சரிவை தடுக்கும் வகையில் விளையாடிய புஜாரா 54-வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்து ரசிர்களின் பொறுமையை சோதித்தார். இவர் ஒருபக்கம் ஆமை வேகத்தில் ஆடியபோதிலும் கேப்டன் கோலி அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து அணிக்கு ரன் சேர்த்தார். விராத் கோலியை ஆட்டமிழக்க இருமுறை கேட்ச் வாய்ப்புகள் கிடைத்தும் அதை தென் ஆப்பிரிக்க வீரர்கள் தவறவிட்டனர். அதை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
சிறப்பாக ஆடிய கோலி 101 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அதன் பின் நீண்டநேரம் நிலைக்காத கோலி 54 ரன்களில் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 84 ரன்கள் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்கத் தொடரில் முதல் முறையாக களம் இறங்கிய ரகானேவும் ஏமாற்றம் அளித்தார். ரகானே (9) ரன்னிலும், விக்கெட் கீப்பர் பர்தீவ் படேல்(2) ரன்னிலும், ஹர்திக் பாண்டயா ரன் ஏதும் சேர்க்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். மிகவும் கட்டுக்கோப்பாக பேட் செய்த புஜாரா 173 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 144 ரன்கள் சேர்த்திருந்த போது, புஜாரா, பர்தீவ் படேல், பாண்டயா ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீணாகப் பறிபோனது.
அதன்பின்பு வந்த கடை நிலை வீரர்களும் நிலைத்து ஆடவில்லை. முகமது ஷமி 8 ரன்னிலும், இசாந்த் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஓரளவுக்கு தாக்குப்பிடித்து பேட் செய்த புவனேஷ்குமார் 30 ரன்கள் சேர்த்திருந்த போது, ரபாடா வேகத்தில் வீழ்ந்தார்.
இந்த முறையும் 163 ரன்னில் இருந்து 166 ரன் சேர்ப்பதற்குள் ஷமி, இசாந்த் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
ஒட்டுமொத்தமாக அணியில் கோலி, புஜாரா, புவனேஷ்வர் ஆகிய 3 வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை படை இலக்க ரன்னில் நடையைக் கட்டினர்.
இந்திய அணி 77 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், மோர்கல், நிகிடி, ஹெலுக்வேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT