Published : 04 Nov 2023 06:41 AM
Last Updated : 04 Nov 2023 06:41 AM
பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - பாகிஸ்தான் மோதுகின்றன.
நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த நிலையில் அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ளது. 8 புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் உள்ளது. பாகிஸ்தான்அணி 7 ஆட்டங்களில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பது பாகிஸ்தான் அணிக்கு குறைந்த அளவிலேயே உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியது. இன்றைய ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா,டேவன் கான்வே, வில் யங், டேரில்மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் அதிரடியாக மட்டையை சுழற்றும் பட்சத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கலாம்.
பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் பஹர் ஸமான் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு வலுசேர்த்துள்ளது. பாபர் அஸம், மொகமது ரிஸ்வான், அப்துல்லா ஷபிக், சவுத் ஷகீல், இப்திகார் அகமது ஆகியோர் பொறுப்புடன் விளையாடினால் எஞ்சிய ஆட்டங்களில் கணிசமான வெற்றிகளை பெறலாம். பந்து வீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி, மொகமது வாசிம் ஆகியோர் நியூஸிலாந்து பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT