Published : 03 Nov 2023 09:15 PM
Last Updated : 03 Nov 2023 09:15 PM

ODI WC 2023 | நெதர்லாந்தை எளிதில் வென்றது ஆப்கன் - பாகிஸ்தானை முந்தி 5-வது இடம்!

லக்னோ: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்காத நெதர்லாந்து 46.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் மேக்ஸ் ஓ'டவுட் 42 ரன்களும், ஏங்கல்பிரெக்ட் 58 ரன்களும் சேர்ந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆப்கன் கேப்டன் நபி, நூர் அகமது சுழற்பந்து வீச்சில் வீழ்ந்தனர். குறிப்பாக, நெதர்லாந்து வீரர்கள் ரன் அவுட் மூலம் வீழ்ந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் நபி 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 180 ரன்கள் இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஸத்ரன் ஆகியோரின் ஓப்பனிங் இணை சீக்கிரமாகவே விக்கெட்டை இழந்தாலும், ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இருவருமே அரைசதம் கடந்தனர். 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹமத் ஷா விக்கெட்டானார். எனினும், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 31 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 31.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் பெறும் நான்காவது வெற்றி இதுவாகும்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி இருந்த ஆப்கானிஸ்தான் தற்போது நெதர்லாந்தை வீழ்த்தியன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x