Published : 02 Nov 2023 04:05 PM
Last Updated : 02 Nov 2023 04:05 PM

வான்கடேயில் நினைவுச் சின்னமான சச்சின் டெண்டுல்கரின் ஸ்டிரைட் சிக்ஸ்! - ஒரு பார்வை

மும்பை: மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் லெஜண்ட், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. அதில் சச்சின் டெண்டுல்கரின் பேவரைட் மற்றும் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத அந்த ‘ஸ்டிரைட் சிக்ஸ்’ அழியா நினைவுச் சின்னமாகியுள்ளது. ஏற்கெனவே ரசிகர்களின் மனதில் ஞாபகச் சிற்பமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்த சிக்ஸ் இப்போது புற நினைவுச் சின்னமாகியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் சிலையில் வடிக்கப்பட்டுள்ள இந்த சிக்ஸ், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வெல்லும்போது காஸ்பரோவிச் என்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரை அடித்த அதே நேர் சிக்ஸரை ஒத்திருக்கிறது. முன் காலை ஒரு அடி முன்னால் போட்டு அப்படியே மட்டையை அடியில் கொடுத்து பந்தை ஒரே தூக்கு, முழுதாக ஸ்ட்ரோக்கை அவர் முடிக்கும் முன்பே ஷார்ஜா மைதானத்தின் ஸ்டிரைட் ஸ்க்ரீனுக்கு மேல் உள்ள கூரை மேல் பந்து போய் விழுந்ததை மறக்கத்தான் முடியுமா?

அதுவும் அதற்கு முந்தைய போட்டியில்தான் மணற்புயலையும் மீறி, தகுதி பெறுவது மட்டும் போதாது. இலக்கை எட்டி முறையாக வெல்ல வேண்டும் என்று தன் முழு அதிரடி திறமைகளையும் காட்டினார் சச்சின். ஆனால் இலக்கை எட்ட முடியவில்லை. ஒருவழியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இன்று வான்கடே சிலையில் வடித்தெடுக்கப்பட்ட அந்த ஸ்டிரைட் சிக்ஸ் அன்று ஷார்ஜாவில் அடித்த அந்த சிக்ஸரை ஒத்தது போலவே தெரிகிறது.

அதேபோட்டியில் ஸ்டிரைட் சிக்ஸ் அடித்த பிறகு, காஸ்பரோவிச் எப்படியும் கோபமடைந்து ஒரு ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை வீசுவார் என்று சச்சின் யூகித்து அடுத்த பந்துக்குத் தயாராக, நினைத்தது போலவே காஸ்பரோவிச் ஷார்ட் பிட்ச் பந்தை வீச, இந்த முறை பந்து ஸ்கொயர் லெக்கில் பார்வையாளர்கள் வரிசையில் இரண்டு மூன்று அடுக்குகள் தாண்டிப் போய் விழுந்தது. வர்ணனையில் இருந்த ஜாம்பவான் இயன் சாப்பல், ‘தட் இஸ் ரிடிகுலஸ்’ என்று காஸ்பரோவிச்சின் பந்து வீச்சை திட்டியதோடு, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர் எப்படி யோசிப்பார் என்பதை யூகித்து வீசுபவரே சிறந்த பவுலர் என்றார்.

வான்கடே சிலைக்கு சச்சினின் அந்த ஷாட்டைத் தேர்வு செய்தது உண்மையில் சரியான தேர்வு. சச்சின் டெண்டுல்கரின் ஆஸ்தான ஷாட்டே தரையோடு தரையாக ஸ்டிரைட் ட்ரைவ் ஆடுவதுதான். அதை விட்டால் அந்த தேர்ட்மேன், டீப் பாயிண்டிற்கு மேல் அடிக்கும் ரேம்ப் ஷாட் என்று கூறலாம். வான்கடேயில் சச்சின் சிலைக்கு முன்னரேகூட 2011 உலகக் கோப்பை வெற்றியை முன்னிட்டு நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்பட்டது. அதில் தோனியின் அந்த கடைசி வெற்றி சிக்ஸில் பந்து விழுந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. பிற்பாடு இந்த சிக்ஸரும் நீங்கா ஞாபகச் சிற்பமாக ரசிகர்கள் மனதில் நினைவில் தங்கியுள்ளது.

உலகில் பெரிய ஜாம்பவான் வீரர்களுக்கு சிலை வைப்பது என்பது வழக்கம்தான். அடிலெய்டில் டான் பிராட்மேன், லார்ட்ஸில் டபிள்யூ.ஜி. கிரேஸ், பார்படாஸில் கேரி சோபர்ஸ், செயிண்ட் ஜானில் விவ் ரிச்சர்ட்ஸ், மெல்போர்னில் ஷேன் வார்ன் சிலைகள் உள்ளன. இந்தியாவின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே.நாயுடுவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

வான்கடேயில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கான ஷாட்டை சச்சினே தேர்வு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறக்க முடியாத எத்தனையோ சிக்ஸர்களை சச்சின் அடித்திருந்தாலும் இந்த ஸ்டிரைட் சிக்ஸ் தனித்துவமானது. 2003 உலகக் கோப்பையில் அக்தரை பாயிண்டின் மேல் அடித்த அப்பர் கட், அதே உலகக் கோப்பையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ கேடிக்கை மிட் விக்கெட்டில் மைதானத்திற்கு வெளியே அடித்த புல் ஷாட் சிக்ஸ், இலங்கை பவுலர் தில்ஹாரா பெர்னாண்டோவை அதேபோல் மைதானத்துக்கு வெளியே மிட் விக்கெட்டில் அடித்த சிக்ஸ், ஷேன் வார்னை விதவிதமாக அடித்த சிக்ஸர்கள் என்று சச்சின் சிக்சர்களைப் பற்றியே விரிவாக ஒரு கட்டுரை எழுதலாம். அந்த அளவுக்கு பலதரப்பட்ட சிக்ஸர்களை விளாசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

மும்பை வீரர்களுக்கே உரியது அந்த ஸ்டிரைட் ட்ரைவ். முதலில் சுனில் கவாஸ்கர் மாஸ்டர் ஆஃப் ஸ்டிரைட் ட்ரைவ் என்றே அழைக்கப்பட்டார். பிறகு சந்தீப் பாட்டீல் இவரும் ஒரு ஸ்டிரைட் ட்ரைவ் பிரியர். அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் நேர் கோடு கிழித்தது போல் அடிக்கும் ஸ்டிரைட் ட்ரைவ்களை மறக்க முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x