Published : 01 Nov 2023 05:46 PM
Last Updated : 01 Nov 2023 05:46 PM

கோல்ஃப் வண்டியில் இருந்து தவறி விழுந்த ஆஸி. அணியின் மேக்ஸ்வெல் - அடுத்தப் போட்டியில் இல்லை!

அகமதாபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் கோல்ஃப் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வரவிருக்கும் திங்கள்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல் பங்கேற்க மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள கிளப்பில் இருந்து ஹோட்டலில் உள்ள அணியுடன் இணைவதற்காக கோல்ஃப் வண்டியில் திரும்பியபோது இந்த எதிர்பாரா விபத்து நடந்துள்ளது. "கோல்ஃப் வண்டியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு பயணித்தபோது, எதிர்பாராவிதமாக தனது பிடியை இழந்து கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் அடிபட்டது. இதில் சிறிய அளவில் மூளையதிர்ச்சி ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையில் உள்ளார். எனவே, அவர் துரதிர்ஷ்டவசமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை இழக்க நேரிடும். எனினும், வேறு எந்த காயமும் ஏற்படவில்லை என்பதில் சற்று மகிழ்ச்சியே" என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் விபத்து தொடர்பாக பேசியுள்ளார்.

இதனிடையே, மேக்ஸ்வெல் ஆறு முதல் எட்டு நாட்களுக்கு சிகிச்சையில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பையின் தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்த ஆஸ்திரேலியா, நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சாதனை சதம் அடித்த மேக்ஸ்வெல் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்துவருகிறார். அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் இல்லாதது சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x