Published : 29 Jan 2018 11:55 AM
Last Updated : 29 Jan 2018 11:55 AM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மன் தரவரிசை புள்ளி பட்டியலில், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவை முந்தினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
இதை ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :
2017ம் ஆண்டு ஐசிசி அமைப்பின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி, மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளார். எம்ஆர்எப் டயர்ஸ் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மன் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 900 புள்ளிகளில் இருந்து 912 புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 54, 41 என இரு இன்னிங்சிலும் சேர்த்தன் மூலம் அவருக்கு கூடுதலாக 12 புள்ளிகள் கிடைத்தன. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மன் தரவரிசைப் பட்டியலில் 31-வது இடத்தில் இருந்து 26-வது இடத்துக்கும் அவர் முன்னேறியுள்ளார்.
911 புள்ளிகள் பெற்று இருந்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாராவை இதன் மூலம் கோலி கடந்து விட்டார். அடுத்ததாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் சாதனையை எட்டிப்பிடிக்க அவருக்கு வாய்ப்பு உள்ளது.
சுனில் கவாஸ்கர் 916 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் அவரை எட்டிப்பிடிக்க கோலிக்கு இன்னும் 5 புள்ளிகள் மட்டுமே தேவை. வரும் ஜூன் மாதம் நடக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி, மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அந்த சாதனையை கோலி படைப்பார் என நம்பலாம்.
விராட் கோலி 900 புள்ளிகளைக் கடந்தபின், மைக்கேல் கிளார்க்(900), ஹசிம் அம்லா(907), சந்தர்பால்(901), பீட்டர்சன்(909) ஆகியோரை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மன் 961 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். அவரின் சாதனையை இன்னும் எந்த வீரரும் முறியடிக்கவில்லை. அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.
மேலும், ஐசிசி பேட்ஸ்மன் தரவரிசையில், இந்திய வீரர் அஜின்கயே ரகானே 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் டீல் எல்கர் 12-வது இடத்துக்கும் முந்னேறியுள்ளர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் முகமது ஷமி 2 இடங்கள் முன்னேறி 15-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் மோர்கல் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT