Published : 31 Oct 2023 04:30 PM
Last Updated : 31 Oct 2023 04:30 PM

‘அந்த வெள்ளை போர்டும், பயிற்சியாளரின் டார்கெட்டும்’ - ஆப்கன் வெற்றிக்கான மந்திரம் இதுதான்!

புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான். இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆப்கன். 242 ரன்கள் இலக்கை எதிர்கொண்ட ஆப்கன் பேட்டர்கள் எந்தவித சலனும் இல்லாமால் பேட்டிங் செய்த விதம் கவனிக்க வைத்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது 5-வது இடத்தில் உள்ள ஆப்கன், 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என முன்னாள் உலக சாம்பியன்களை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான். நேற்றைய போட்டியில் கவனிக்க வைத்த மற்றொரு விஷயம், ஆஃப்கானிஸ்தான் சேஸிங் செய்துகொண்டிருக்கையில் அவர்களின் பெவிலியனில் சில எண்கள் எழுதிவைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளை போர்டு. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. அந்த போர்டும், அதில் இருந்த நம்பர்களும் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கும் சம்பந்தம் இருக்கிறது.

இலங்கை விதித்த இலக்கை சேஸ் செய்ய, 10 ஓவர்களில் இவ்வளவு ரன்கள், 20 ஓவர்களில் இவ்வளவு ரன்கள், 40 ஓவர்களில் இவ்வளவு ரன்கள் என அந்த போர்டில் எழுதிவைக்கப்பட்டிருந்தது. இப்படி எழுதிவைத்தறகான காரணம், சேஸிங்கில் ஆப்கன் அணி சந்திக்கும் தடுமாற்றமே. சேஸிங் என்றாலே சொதப்பக்கூடிய அணி என நீண்ட காலமாகவே ஆப்கன்மீது பொதுவான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. அது உண்மையும்கூட. முதலில் பேட்டிங் செய்தால் அந்த அணி சிறப்பாக செயல்பட்டிருப்பதையும், சேஸிங்கில் பல சொதப்பியிருப்பதும் கடந்த காலங்களில் கண்கூடாக பார்த்துள்ளோம்.

சேஸிங்கில் கோட்டை விடுவதை தடுக்கும் நோக்கில் அந்த அணியின் பயிற்சியாளர் செய்த ஏற்பாடே அந்த வெள்ளை போர்டும், அதில் விதிக்கப்பட்ட டார்க்கெட்களும். போட்டிக்கு பிறகான பத்திரிகையாளர் சந்திப்பிலும் ஆப்கன் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் இதனை வெளிப்படுத்தினார். அதில், “முதல் பேட்டிங்கிற்கும் சேஸிங்கிற்கும் வித்தியாசம் உள்ளது. சூழலை பொறுத்து முதலில் பேட்டிங்கில் ரன்கள் எடுக்க வேண்டி இருக்கும். ஆனால், சேஸிங்கில் அடைய வேண்டிய இலக்கில் இருந்து எந்த மாற்றமும் இருக்காது. பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக 280 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால், அதனை பூஜ்ஜியத்தில் இருந்து பார்த்தால் எட்ட முடியாத இலக்காக தோன்றும்.

ஆனால் அதனையே 10 ஓவர்களில் இவ்வளவு ரன்கள் எடுத்தால் போதும், 20, 30, 40 ஓவர்களில் இவ்வளவு ரன்கள் எடுத்தால் போதும் என்று சிறிய இலக்காக மாற்றினால் பெரிய டார்கெட் என்ற எண்ணம் குறையும். சிறிய இலக்குகளை அடையும்போது பேட்ஸ்மேன்களுக்கு சரியாக முன்னேறுகிறோம் என்கிற நம்பிக்கை உண்டாகும். அதற்காகவே அந்த போர்டில் எழுதப்பட்டிருந்த கணக்குகள். எதிர்பார்த்தபடி அது நன்றாக ஒர்க்அவுட் ஆனது" என விவரித்திருக்கும் ஜொனாதன் டிராட், ஆப்கன் பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த டார்கெட்டை விதித்துள்ளார்.

அது செஞ்சுரி அடிப்பது. ஆப்கானிஸ்தான் தன்னை வலுவான அணியாக நிலைநிறுத்துவதற்கு பேட்ஸ்மேன்கள் சதங்கள் அடிக்கத் தொடங்க வேண்டும் என்பதே ஜொனாதன் டிராட் கூறுவது. “எங்கள் அணியில் இன்னும் யாரும் செஞ்சுரி அடிக்கவில்லை. அதுதான் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த சவால். யாரேனும் ஒருவர் பொறுப்பேற்றுகொண்டு நீண்ட நேரம் பேட்டிங் செய்து சதம் அடிக்க வேண்டும். எங்கள் வீரர்களால் இதை செய்ய முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த சவால் அடுத்த ஆட்டத்தில் இருந்து தொடங்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜொனாதன் டிராட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x