Published : 31 Oct 2023 05:50 AM
Last Updated : 31 Oct 2023 05:50 AM
கொல்கத்தா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அரை இறுதிக்குமுன்னேறுவதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் ஏறக்குறைய இழந்துவிட்டது. ஏனெனில் தற்போதைய நிலையில் முதல் 4 இடங்களில் உள்ளஅணிகள் அதிக அளவிலான புள்ளிகளுடன் வலுவாக உள்ளன. 12 புள்ளிகளுடன் உள்ள இந்தியாவும், 10 புள்ளிகளுடன் உள்ள தென் ஆப்பிரிக்காவும் அரை இறுதிக்கு முன்னேறுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
தலா 8 புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதி சுற்றில் கடைசி இரு அணிகளாக நுழையும் வகையில் சிறந்த பார்மில் உள்ளன. இதனால் ஏதேனும் மாயங்கள் நிகழ்ந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்ற நிலை உள்ளது. பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சம் 10 புள்ளிகளையே எட்ட முடியும்.
இந்த 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி சாதாரணமாக வெற்றி பெற்றால் போதாது. பெரிய அளவிலான வெற்றிகளை குவிக்க வேண்டும். ஏனெனில் அந்த அணியின் நிகர ரன் ரேட் விகிதம் -0.205 ஆக இருக்கிறது. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தால் 1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிடும்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில்பாகிஸ்தான் அணி 4 ஆட்டங்களில்முழுமையாக 50 ஓவர்கள் பேட்செய்யவில்லை. முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பார்மின்றிதவிப்பதும், ஒருங்கிணைந்த செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியதும் அந்தஅணிக்கு கடும் பின்னடைவை கொடுத்தது.3 அரை சதங்கள் அடித்துள்ள கேப்டன் பாபர் அஸம், இன்றைய ஆட்டத்தில் பெரிய அளவில் ரன் குவிப்பதில் முனைப்பு காட்டக்கூடும்.
உலகளாவிய தொடரில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது ஒட்டுமொத்த அணியின் செயல் திறனையும் வெகுவாக பாதித்துள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்பதால் ஷாகீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூஃப், மொகமது வாசிம் ஆகியோரிடம் இருந்து சிறந்த செயல்திறன் வெளிப்பட வாய்ப்பு உள்ளது.
ஷகிப் அல் ஹசன் தலையிலான வங்கதேச அணி 6 ஆட்டங்களில் 5-ல்தோல்வி அடைந்து அரை இறுதிக்குமுன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவேஇழந்துவிட்டது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில்ரன் குவிக்காதது பலவீனமாக உள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 230 ரன்களை துரத்திய வங்கதேசம் அணி 142 ரன்களில் ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் அணியில் உள்ள 6 பேட்ஸ்மேன்களில் 4 பேர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி இருந்தனர்.
அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு என்பது பாகிஸ்தான் அணிக்கு கானல் நீராக மாறிஉள்ளதால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற்று கவுரவமான இடத்துடன் தொடரை நிறைவு செய்வதில் அந்த அணி கவனம் செலுத்தக்கூடும். இதே நிலையில்தான் வங்கதேச அணியும் களமிறங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT