Published : 30 Oct 2023 06:42 PM
Last Updated : 30 Oct 2023 06:42 PM

முகமது ஷமியின் அந்த 10 பந்துகள்... - பென் ஸ்டோக்ஸ் பரிதாபம்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘பாஸ் பால்’ என்று புகழ்பெற்ற அதிரடி பேட்டிங்கை மந்தமான இங்கிலாந்து பேட்டர்களிடையே புகுத்திய பிரெண்டன் மெக்கல்லமின் தலைமை செயலதிகாரி - கேப்டன் என்ற பெயர் எடுத்த டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் தன் ஓய்வைத் திரும்பப் பெற்று மீண்டும் அணிக்குள் வந்து இந்த உலகக் கோப்பையில் கடும் அவமானங்களைச் சந்தித்து வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் 8 பந்துகளில் 5 ரன்கள், இலங்கைக்கு எதிராக பெங்களூருவில் 72 பந்துகளில் 43 ரன்கள், இந்தியாவுக்கு எதிராக நேற்று லக்னோவில் 10 பந்துகள் 0 என்று பரிதாபத்துக்குரியவரானார்.

அதுவும் நேற்று அவரது ஷாட் தேர்வு படுமோசமாக இருந்தது. எப்படியாவது பெட்டில் பந்து பட்டுவிட வேண்டும் என்ற ஒரு விதமான கையறு நிலைக்கு வந்து விட்டார். காரணம் ஷமியின் அபாரமான பந்து வீச்சு. ஷமியின் அட்டாக்கிங் பந்துவீச்சால் பென் ஸ்டோக்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. கடைசியில் அவரது ஆளுமைக்கே பங்கம் விளைவிக்கும் ஒரு மோசமான ஷாட்டை ஆடப்போய் கிளீன் பவுல்டு ஆகி வெளியேறினார்.

அவர் ஆஷஸ் தொடருக்கு முன்னால் சொன்னதை பலரும் மறந்திருக்கலாம், அல்லது அறியாதிருக்கலாம். அது இவ்வாறாக இருந்தது.... “ஷாட் தேர்வு எப்போது தவறு என்றால் அது அவுட் ஆகும் போதுதான், மற்றபடி அதே ஷாட்டை வேறொரு பந்துக்கு ஆடும்போது பவுண்டரியோ, சிக்சரோ பறக்கும் போது யாரும் ஷாட் தேர்வு பற்றி விமர்சிக்க மாட்டார்கள்” என்றார்.

ஆம்! பென் ஸ்டோக்ஸ் சொல்வது உண்மைதான். நம் தமிழ் வர்ணனையாளர்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் கொச்சைகளில் ஒன்று “பட்டா பாக்கியம் படாட்டி லேகியம்” போல்தான். ஆனால் இந்த ரீதியில் ஒரு ஷாட்டுக்கு பந்து மாட்டினாலும் அதே போன்ற இன்னொரு ஷாட்டில் ஸ்டம்ப் பறந்துவிடும் அபாயம் உள்ளதை கிரிக்கெட் முன்னாள் ஜாம்பவான்கள் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.

விராட் கோலியை எல்லோரும் 'நேர்த்தியான பிளேயர்' எனக் கூறுவது எதனால் என்றால் , அவர் எந்த வடிவமாயினும் கிரிக்கெட்டுக்கான முறையான ஷாட்களையே தேர்வு செய்கிறார். நேற்றுகூட அவர் டவுன் தி ட்ராக் வந்து அடிக்கப்போய் அவுட் ஆனது கூட கிரிக்கெட் ஆட்ட அழகியலுக்குட்பட்டதுதான். ஆனால் பென் ஸ்டோக்ஸ் ஆடியது அப்படிப்பட்டதல்ல.

ஷுப்மன் கில் அவுட் ஆன சிறிதுநேரத்தில் அப்படி ஆடத்தேவையில்லாத ஷாட் என்று கோலி நேற்று ஆடிய ஷாட்டை கூறலாமே தவிர, மற்றபடி ஒரு பவுலர் லைன் அண்ட் லெந்தில் சீராக வீசுகிறார் என்றால் அவரது பவுலிங்கை கொஞ்சம் நிலைகுலையச் செய்ய இந்த மாதிரி உத்தியைக் கடைப்பிடிப்பதாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஆனால் பென் ஸ்டோக்ஸ் ஆடியது ஷமி பந்து வீச்சை முற்றிலும் கணிக்க முடியாமல் கடைசியில் கையறு நிலையில் ஒரு சுத்து சுத்திப் பார்ப்போம் என ஆடிய ஷாட். பென் ஸ்டோக்ஸ் வேறொரு தருணத்தில் கூறியபோது, ‘பாசிட்டிவ் ஆக ஆடுவதற்கும், பொறுப்பற்ற அலட்சிய ஷாட்டை ஆடுவதற்கும் உள்ள இடைவெளி நூலிழைதான்’ என்றார். ஆனால் நேற்று அவர் ஆடிய ஷாட் பாசிட்டிவ் ஷாட் அல்ல. வெறுப்பில் ஒன்று பவுண்டரி, இல்லையேல் அவுட் என்பது போல் ஆடப்பட்ட பொறுப்பற்ற அலட்சிய ஷாட்டே.

அதே போல்தான் ஜோ ரூட் ஆடியதும். அவர் அவுட் ஆன அந்த பந்து ஸ்டெம்புக்கு நேராக உள்ளே வந்தது. அதனை ஸ்ட்ரைட் பேட்டில் தடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால், பிளிக் ஆடப்போய் பந்தை கோட்டைவிட எல்பிடபிள்யு ஆனது. அதுவும் மோசமான ஷாட் தேர்வே. ஆனால் பொறுப்பற்ற ஆட்டம் என்று கூற முடியாது. இங்கிலாந்து அணி ரோகித் சர்மா போல் ஆடியிருக்க வேண்டும். ஜோ ரூட் அத்தகைய பிளேயர்தான். பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் பல நல்ல இன்னிங்ஸ்களை நெருக்கடியில் ஆடியவர்தான். ஆனால் நேற்று பும்ரா, ஷமியின் சிறப்பான பந்துவீச்சுக்கு 46,000 ரசிகர்களும் கொடுத்த பிரஷர் பென் ஸ்டோக்ஸை அசைத்துப் பார்த்துவிட்டது என்றே கூற வேண்டும்.

குட் லெந்த்தில் வீசப்பட்ட ஷமியின் முதல் பந்தை ஆடாமல் விட்டார் ஸ்டோக்ஸ். இரண்டாவது பந்து ஷார்ட் பால். அதை கவரில் ஒரு அறை அறைய முயன்றார். ஆனால் பந்து பேட்டைத் தாண்டி கடந்து கீப்பர் கேஎல் ராகுல் கைகளில் தஞ்சமடைந்தது. பிறகு கொஞ்சம் லெந்த்தை குறைத்து இழுத்து வீசிய மூன்றாவது பந்தை, ஸ்டோக்ஸ் பாயிண்டில் திருப்பி விட முயன்று பீட்டன் ஆனார். இன்னொரு முனையில் பும்ரா பேர்ஸ்டோவுக்கு மெய்டன் ஓவர் வீச அதையும் ஸ்டோக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். இதில் ஒட்டுமொத்தமாக பிரஷர் ஏற, ஷமியின் அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டோக்ஸ் மீண்டும் பீட்டன் ஆனார். அடுத்த பந்து இறங்கி வந்து அடித்தார் பந்து பீல்டரைத் தாண்டவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இதைச் செய்து வெற்றி கண்டதால் ஷமியிடமும் பாச்சா பலிக்கும் என்று நினைத்தார் ஸ்டோக்ஸ். மீண்டும் ஒரு பந்து குட் லெந்தில் பிட்ச் ஆகி வெளியே ஸ்விங் ஆக ஸ்டோக்ஸ் மீண்டும் பீட்டன்.

பிறகு ஷமியின் பந்தை நிதானமாக மிட் ஆன் திசையில் தட்டி விட்டார். ரன்கள் கிடைக்கவில்லை. பொறுத்து பொறுத்து பொறுமையிழந்தவர் அப்போதுதான் ஷமி வீசிய பந்தை தன் முன் காலை விலக்கிக் கொண்டு ஆஃப் சைடில் ஒரு ஷாட்டை ஆட முயன்றார் ஸ்டோக்ஸ். பந்து அருமையாக சறுக்கிக் கொண்டு உள்ளே வந்து 3 ஸ்டம்ப்களையும் பதம் பார்த்தது. பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என எதுவாக இருந்தாலும் ஒரு பிரச்சனையைத் தீர்க்க, ஒரு பிரஷர் சூழ்நிலையை தீர்க்க பல வழிமுறைகள் உண்டு. ஆக்ரோஷம் என்ற ஒற்றை வழிமுறையை மட்டுமே பிரெண்டன் மெக்கல்லம் போன்ற கோச்களிடமிருந்து கற்றுக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் தவறான பவுலருக்கு எதிராக, தவறான ஷாட் தேர்வைச் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டார். எந்த ஒரு கிரிக்கெட்டிலும் ராகுல் திராவிட் அணுகுமுறையும் தேவை மெக்கல்லம் அணுகுமுறையும் தேவை. ஆனால் இரண்டில் ஒன்றுதான் சரி என்று முடிவு கட்ட முடியாது. இரண்டும் கலந்த கலவைதான் சரியான அணுகுமுறை. ஒருநாள் கிரிக்கெட் என்பதே டி20 கிரிக்கெட்டின் ஆக்ரோஷமும் டெஸ்ட் கிரிக்கெட்டின் எச்சரிக்கையும் கலந்த ஒரு வடிவம்தான். எனவே நெருக்கடி தருணங்களில் வெறும் ஆக்ரோஷம் என்ற ஒற்றைத்தீர்வு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதே நேற்று பென் ஸ்டோக்ஸும் இங்கிலாந்தும் கற்றுக் கொண்ட பாடமாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x