Published : 29 Oct 2023 04:43 AM
Last Updated : 29 Oct 2023 04:43 AM

லக்னோ மைதானத்தில் இங்கிலாந்துடன் இன்று மோதல் - வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து அணி வீரர்கள்.

லக்னோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் இலக்கை வெற்றிகரமாக துரத்தி அசத்திய இந்திய அணி மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தும் முனைப்பில் களமிறங்குகிறது.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். 354 ரன்கள் வேட்டையாடி உள்ளவிராட் கோலி, 311 ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மா ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு முறை ரன் வேட்டை வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள ஜஸ்பிரீத் பும்ரா, 8 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள குல்தீப் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாததால் அவரது இடத்தில் இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கக்கூடும். ஏனெனில் லக்னோ ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இதேபோன்று மொகமது சிராஜ் வெளியே அமரவைக்கப்படக்கூடும். ஏனெனில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வீழ்த்திய மொகமது ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் சேர்ப்பதில் கவனம் செலுத்தக்கூடும். ஸ்ரேயஸ் ஐயர், நடப்பு தொடரில் 5 ஆட்டங்களில் 130 ரன்களே சேர்த்துள்ளார். முதன்முறையாக கடந்த ஆட்டத்தில் களமிறக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இம்முறை மோசமான வகையில் விளையாடி வருகிறது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இந்த வெற்றியும் வங்கதேச அணிக்கு எதிராக கிடைக்கப்பெற்றதே. முன்னதாக நியூஸிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து தொடரை மோசமாக தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33.2 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி சுருண்டிருந்தது. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஆக்ரோஷ பேட்டிங் அணுகுமுறையால் வெற்றிகளை குவித்து அனைத்து அணிகளையும் மிரளச் செய்த இங்கிலாந்து அணியின் செயல் திறன் இந்திய ஆடுகளங்களில் வேகமெடுக்கவில்லை.

இந்திய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறான அணுகுமுறையை திறம்பட மேற்கொள்ளாததால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தற்போது அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களான டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜாஸ் பட்லர், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி ஆகியோர் அணியில் இருந்த போதிலும் இவர்களிடம் இருந்து ஒருங்கிணைந்த செயல் திறன் வெளிப்படவில்லை.

இதில் ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், மொயின் அலி ஆகியோர் இந்திய ஆடுகளங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். இருப்பினும் இவர்கள் ரன்கள் சேர்க்க தடுமாறுவது அணியின் ஒட்டுமொத்த செயல்திறனையும் பாதித்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள பென் ஸ்டோக்ஸ், இலங்கை அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தார். எனினும் அது, அணியின் சூழ்நிலையை மாற்ற உதவவில்லை.

பந்து வீச்சிலும் இங்கிலாந்து அணி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், சேம் கரண் ஆகியோர் அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ஆதில் ரஷித்தின் சுழலும் நெருக்கடி கொடுக்காதது ஏமாற்றமாக உள்ளது. இதுஒருபுறம் இருக்க ரீஸ் டாப்லேகாயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள பிரைடன் கார்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே இங்கிலாந்து அணியால் வெற்றிக்கு முயற்சிக்க முடியும்.

இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 லீக் ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும் அதிகபட்சம் 10 புள்ளிகளையே எட்ட முடியும். முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் ஏற்கெனவே வலுவாக உள்ளன.

இதனால் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பது அரிதாகவே உள்ளது. அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேறுவது உறுதியாகிவிடும்.

சமன் செய்வாரா கோலி?: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்களுடன் அதிக சதம்விளாசியவர்களின் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இவரதுசாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு ஒரே ஒருசதமே தேவையாக இருக்கிறது. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 95 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசி, சச்சினின் சாதனையை சமன் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 வருடமாச்சு…: உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி கடைசியாக 2003-ம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் 2011-ம் ஆண்டு தொடரில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் டையில் முடிவடைந்தது. 2019-ம்ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x