Published : 29 Oct 2023 04:57 AM
Last Updated : 29 Oct 2023 04:57 AM
ஹாங்சோ: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 111 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்ததுடன் பட்டியலில் 5-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தது.
ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. போட்டியின் நிறைவு நாளான நேற்று மட்டும் இந்தியா 12 பதக்கங்களை வென்றது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலப் பதக்கம் என 111 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்ததுடன் பட்டியலில் 5-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தது.
சீனா 521 பதக்கங்களுடன் (214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம்) முதலிடத்தையும், ஈரான் 131 பதக்கங் களுடன் (தங்கம் 44, வெள்ளி 46, வெண் கலம் 41) 2-வது இடத்தையும், ஜப்பான் 150 பதக்கங்களுடன் (தங்கம் 42, வெள்ளி 49, வெண்கலம் 59) 3-வது இடத்தையும், கொரியா 130 பதக்கங்களுடன் (தங்கம் 30, வெள்ளி 33, வெண்கலம் 40) 4-வது இடத்தையும் பிடித்தன.
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற தொடரில் அதிகபட்சமாக 72 பதக்கங்கள் வென்றிருந்தது. இந்த சாதனையை இந்தியா தற்போது முறியடித்துள்ளது. மேலும் ஆசிய பாரா விளையாட்டில் பதக்கப் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இந்திய அணி வந்துள்ளதும் இதுவே முதன்முறை.
பல்வேறு போட்டிகளை உள்ளடக்கிய சர்வதேச அளவிலான தொடர்களில் இந்தியா 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவிப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 101 பதக்கங்கள் வென்றிருந்தது.
ஹாங்சோ போட்டியில் 43 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 313 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். மொத்தம் நடைபெற்ற 22 விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் 17 விளையாட்டுகளில் பங்கேற்றிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT