Published : 29 Oct 2023 04:57 AM
Last Updated : 29 Oct 2023 04:57 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 389 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து 5 ரன்னில் தோல்வி

ஜிம்மி நீஷமை ரன் அவுட் செய்யும் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஷ்.

தரம்சாலா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 389 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 388 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து களமிறங்கிய தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். இது அவருக்கு 4-வது சதமாக அமைந்தது. மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் 65 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.1 ஓவரில் 175 ரன்கள் குவித்து நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களை மிரளச் செய்தது.

மிட்செல் மார்ஷ் 36, ஸ்டீவ் ஸ்மித் 18, மார்னஷ் லபுஷேன் 18, கிளென் மேக்ஸ்வெல் 41, ஜோஷ் இங்கிலிஷ் 38, கேப்டன் பாட் கம்மின்ஸ் 37, மிட்செல் ஸ்டார்க் 1, ஆடம் ஸம்பா 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் நியூஸிலாந்து தரப்பில் கிளென் பிலிப்ஸ், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

389 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணியானது 40 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. டேவன் கான்வே 28, வில் யங் 32, டேரில் மிட்செல் 54, டாம் லேதம் 31, கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 97 ரன்கள் தேவையாக இருந்தன. தனது 2-வது சதத்தை விளாசிய ரச்சின் ரவீந்திரா 89 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் விளாசிய நிலையில் பாட் கம்மின்ஸ் வேகம் குறைத்து வீசிய பந்தில் லாங் ஆஃப் திசையில் நின்ற லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ஜிம்மி நீஷம் கடுமையாக போராடினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மிட்செல் சாண்ட்னர் 17, மேட் ஹென்றி 9 ரன்களில் வெளியேறினர். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 32 ரன்கள் தேவையாக இருந்தன. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 49-வது ஓவரின் முதல் பந்தை டிரெண்ட் போல்ட் சிக்ஸருக்கு விளாசினார். அடுத்த 2 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் 4-வது பந்தில் நீஷம் பவுண்டரி அடித்தார். எனினும் அடுத்த இரு பந்துகளையும் நீஷம் வீணடிக்க இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைக்கப்பெற்றன.

மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்டது. வைடாக வீசப்பட்ட அடுத்த பந்து பவுண்டரிக்கு சென்றது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. இதன் பின்னர் வீசப்பட்ட 3 பந்துகளிலும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அற்புதமாக பீல்டிங் செய்து பவுண்டரிகளாக மாறுவதை தடுத்தனர். இந்த 3 பந்துகளில் தலா 2 ரன்கள் சேர்க்கப்பட்டன. கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் லெக் ஸ்டெம்ப் திசையை நோக்கி புல்டாஸாக வீசப்பட்ட பந்தை ஜிம்மி நிஷம் வலுவாக அடிக்க முயன்றார்.

ஆனால் பந்து மட்டையில் சரியாக சிக்கவில்லை. இதில் 2 ரன்கள் ஓடும் முயற்சியின் போது ஜிம்மி நீஷம் ரன் அவுட் ஆனார். அத்துடன் நியூஸிலாந்து அணியின் நம்பிக்கை முடிந்தது. ஜிம்மி நிஷம் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லாக்கி பெர்குசன் ரன் ஏதும் எடுக்கவில்லை. முடிவில் 50 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 383 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

டிரெண்ட் போல்ட் 8 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். களத்தில் செட்டில் ஆன பேட்ஸ்மேன்களான டாம் லேதம், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இக்கட்டான தருணங்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்திருந்தனர். இதனால் இறுதிப்பகுதியில் மட்டையை சுழற்றுவதற்கு பிரதான பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதுவே நியூஸிலாந்து அணி வெற்றிக்கோட்டை கடக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக அமைந்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஸம்பா 3 விக்கெட்களையும் ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வானார். ஆஸ்திரேலிய அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்குமுன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது. நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ளஅந்த அணி 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் தொடர்கிறது.

771 ரன்கள்: ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான ஆட்டத்தில் கூட்டாக 771 ரன்கள் வேட்டையாடப்பட்டன. இது உலகக் கோப்பை தொடர்களில் ஓரு ஆட்டத்தில் குவிக்கப்பட்ட அதிக ரன்களாகும். இதற்கு முன்னர் நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான ஆட்டத்தில் 754 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x