

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ. 12.5 கோடிக்கும், ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் ரூ. 9.4 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டத்திலேயே பல முன்னணி வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர்.
பென் ஸ்டோக்ஸ் ஆரம்ப விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இவரை ஏலத்தில் எடுக்க சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் ஆர்வம் காட்டின. வேகமாக ஏலத்துக்கான விலை கூட ஆரம்பித்தது. ரூ. 6.6 கோடி வரை ஏலத்தொகை மலையேற, கொல்கத்தா அணியும் போட்டியில் இணைந்தது. இந்த கட்டத்தில் சென்னை பின் வாங்கியது.
இப்போது விலை ரூ. 10 கோடியை தாண்ட பஞ்சாப் விடாமல் ரூ. 12 கோடி வரை ஏலத்தொகையை ஏற்றியது. கடைசியாக ரூ. 12.5 கோடி என ஏலத்தில் இணைந்தது ராஜஸ்தான் அணி. பஞ்சாப் பின்வாங்க, அந்த தொகைக்கே ராஜஸ்தான் அணி ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் கடந்த முறை ரூ. 14.5 கோடிக்கு புனே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் பென் ஸ்டோக்ஸுக்கு எதிரே எடுக்கப்படவிருக்கும் சட்ட நடவடிக்கைகளால் அவர் ஐபிஎல் 2018 தொடர் முழுவதும் பங்கெடுக்க முடியாமல் போனால், அவரை ஏலத்தில் எடுக்கும் அணி வேறொரு மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் அவர் பாதி தொடர் விளையாடி மீதித் தொடர் ஆட முடியாமல் போனால் வேறொரு வீரரை மாற்றாக எடுக்க முடியாது.
மிட்சல் ஸ்டார்க்கை வாங்கிய கொல்கத்தா
மிடசல் ஸ்டார்க் ரூ. 2 கோடி ஆரம்ப விலையுடன் ஏலத்துக்கு வந்தார். கிங்ஸ் 11 பஞ்சாப் அணி உடனடியாக களத்தில் குதித்தது. கொல்கத்தாவும் இணைந்தது. கொல்கத்தா அணி ரூ. 5 கோடி வரை கேட்க, பஞ்சாப் விடாமல் விலையை உயர்த்தியது. கொல்கத்தா அணி ரூ. 9 கோடி வரை விலை கேட்க பஞ்சாப் அணி ரூ. 9.2 கோடி என்றது. இறுதியில் ரூ. 9.2 கோடிக்கு மிட்சல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி வாங்கியது.