Last Updated : 29 Oct, 2023 02:26 AM

2  

Published : 29 Oct 2023 02:26 AM
Last Updated : 29 Oct 2023 02:26 AM

“கைகள் இல்லை; ஆனாலும் தன்னம்பிக்கைக்கு குறைவில்லை” - நெட்டிசன்கள் கொண்டாடும் ஷீதல் தேவி

ஹாங்சோ: 4-வது பாரா ஆசிய விளையாட்டி போட்டிகளின் முடிவில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும்.

இந்த போட்டியில், 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஷீதல் தேவி. 16 வயதே ஆன இவர், வில்வித்தையில் பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது, நடப்பு போட்டி தொடரில் பெற்ற 3-வது பதக்கமாக அமைந்தது. முன்னதாக காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றிருந்தார்.

ஷீதல் தேவி தான் இன்டர்நெட் உலகின் தற்போதைய சென்ஷேசன். காரணம் அவர் தங்கம் வெண்றதுக்காக மட்டுமல்ல. அதையும் தாண்டி தனது தன்னம்பிக்கைக்காக ஷீதல் இணையவாசிகள் கொண்டாடப்பட்டு வருகிறார். புகைப்படம் பார்த்ததும் தெரிந்திருக்கும். அவர் இரண்டு கைகள் இல்லாதவர் என்று. ஆம், அது உண்மைதான். உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற கைகளற்ற முதல் பெண் வில்வித்தை வீராங்கனை ஷீதல் தேவியே.

ஜம்மு காஷ்மீரில் உள்ள லோய் தார் கிராமத்தைச் சேர்ந்த ஷீதல் தேவி, ஃபோகோமெலியா என்ற பிறவி நோய்க்குறைபாட்டால் கைகள் இன்றிப் பிறந்தார். அப்பா விவசாயி. அம்மா ஆடு மேய்ப்பவர். மிக ஏழ்மையான குடும்பம். இரண்டு கைகளும் இல்லாமல், சிறிய விஷயத்துக்கும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் வாழ்க்கை மிகவும் கடினமானது. ஆனாலும் ஷீதல் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாகத் திகழ்ந்தார்.

பள்ளிச் சென்றுகொண்டிருந்த அவரது வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தியது 2021ம் ஆண்டு அவரது சொந்த ஊரில் இந்திய ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வே. இந்த நிகழ்வின் போது ஷீதலின் விளையாட்டுத் திறமை கண்டறியப்பட்டது.ராணுவ அதிகாரி ஒருவர் ஷீதலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, வில்வித்தை அகாடமியில் சேர்த்துவிட்டார். கைகள் இல்லை என்றாலும், அவரின் மேல் உடலமைப்பு வலுவாக இருப்பது மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால் வில்வித்தையில் அவரை பயிற்சிபெற ஊக்கப்படுத்தினர். அதற்குப் பிறகு ஷீதலின் வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்டது.

செயற்கை கை பொருத்தும் முயற்சிகள் தோல்வியுற்றாலும், தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. கைகள் இல்லாத ஷீதலுக்காகக் கால்களால் இயக்கக்கூடிய வில்லும் அம்பும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. உலக அளவில் கைகள் இன்றிக் கால்களால் வில்லை இயக்கும் முதல் பெண் என்கிற சிறப்பையும் பெற்றார் ஷீதல். ஆறே மாதங்களில் வில்வித்தையில் சிறந்த வீராங்கனையாக உருவானார். ஆரம்பத்தில் ஒரு வில்லை தூக்குவது கூட கடினமாக இருந்த நிலையில் தொடர் பயிற்சியின் மூலமாக தினமும் 50-100 அம்புகளை வீசத் தொடங்கியவர், இப்போது ஒரே நாளில் 300 அம்புகளை வீசும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

“ஆரம்பத்தில் என்னால் சரியாக வில்லை தூக்க முடியவில்லை. ஆனால், இரண்டு மாதங்கள் பயிற்சி செய்த பிறகு, அது எளிதாகிவிட்டது. எனது பெற்றோருக்கு என் மீது எப்போதும் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டுள்ளனர். கிராமத்தில் உள்ள எனது நண்பர்களும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் வென்ற இந்தப் பதக்கங்கள் நான் சிறப்பு வாய்ந்தவன் என்பதை நிரூபிக்கின்றன. இந்த பதக்கங்கள் எனக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் சொந்தமானது” என பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு தன்னம்பிக்கையுடன் பேசிய ஷீதலுக்கு பிடிக்காத ஒரே விஷயம் என்னவென்றால், அவருக்கு கைகள் இல்லை என்பதை நினைத்து வருத்தப்படும் மக்களின் முகங்களைப் பார்ப்பதுதானாம்.

— The Khel India (@TheKhelIndia) October 27, 2023

ஷீதலின் பயிற்சியாளர் குல்தீப், “கால்களால் வில்லைப் பிடித்து, அம்பை எய்வது அவ்வளவு எளிதானது அல்ல. சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் மட்டுமே இதைச் செய்ய இயலும். ஷீதலிடம் அந்த எண்ணம் அதிகம் இருந்ததால், வெகு விரைவில் ஒரு வீராங்கனையாக உருவாகிவிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த கைகள் இல்லாத வில்வித்தை வீரரின் வீடியோக்களை அடிக்கடி போட்டுக் காட்டியது ஷீதலுக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்கிறார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல, சமீபத்தில் நடந்து முடிந்த செக் குடியரசில் உள்ள பில்சனில் பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார் ஷீதல். இதுதான் ஷீதல் கலந்துகொண்ட முதல் சர்வதேசப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம், பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு ஷீதலுக்குக் கிடைத்திருக்கிறது.

இவ்வளவு குறுகிய காலத்தில் பாராலிம்பிக் போட்டி வரை செல்லவிருக்கும் ஷீதலின் இந்த வெற்றி பயணம், உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கையில் எதையும் செய்ய முடியும் என்பதற்கு சான்று. அவர் பெற்ற வெற்றிகள் பில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு ஒரு உத்வேகம். இது போதாது என்று நினைத்து தங்கள் கனவுகளைப் பின்பற்றாத பலரை ஊக்கம் கொடுத்திருக்கிறார் ஷீதல். இதனால் அவரை இன்டர்நெட் உலகம் கொண்டாடி வருகிறது.

ஷீதலை கொண்டாடியுள்ள மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா, "நான் ஒருபோதும், என் வாழ்க்கையில் சிறிய பிரச்சனைகளைப் பற்றி புகார் செய்ய மாட்டேன். ஷீதல் தேவி நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஆசிரியர். தயவு செய்து எங்களின் ஏதேனும் ஒரு காரைத் தேர்ந்தெடுங்கள், நாங்கள் அதை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x