Published : 27 Oct 2023 05:00 PM
Last Updated : 27 Oct 2023 05:00 PM

“அன்றைய தினமே முடிவெடுத்துவிட்டேன்” - ஓய்வு தருணத்தை முதல் முறையாக பகிர்ந்த தோனி

பெங்களூரு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தருணத்தை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அரை இறுதிப் போட்டிதான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி. அந்தப் போட்டியில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்திய அணி அரை இறுதியோடு அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதன்பிறகு ஓய்வு குறித்த எந்த அறிவிப்பையும் தோனி சொல்லாமல் இருந்தார். அந்தச் சூழலில்தான் கடந்த 2020-ல் ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற முடிவு செய்தேன் என்பதை தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார் தோனி. பெங்களூருவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய தோனி, "மனதுக்கு நெருக்கமான ஆட்டத்தில் தோல்வியற்றால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். என்னைப் பொறுத்தவரை, 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியே நான் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய கடைசி நாள். அந்த நாளுக்கு பின் ஒரு வருடம் கழித்து நான் ஓய்வு பெற்றேன். ஆனால் உண்மை என்னவென்றால் உலகக் கோப்பை அரை இறுதி அன்றே நான் ஓய்வு பெற்றுவிட்டேன்.

கிரிக்கெட் வீரர்களுக்கு சில இயந்திரங்கள் வழங்கப்படும். அன்றைய தினத்துக்கு பின், நான் பயிற்சியாளரிடம் செல்லும் ஒவ்வொரு முறையும் எனக்கு கொடுக்கப்பட்டவற்றை அவரிடம் திருப்பி கொடுத்தேன். பயிற்சியாளர் அதனை வாங்க மறுத்து, 'இல்லை நீ அதை வைத்துக்கொள்'. என்றார். அந்த தருணத்தில் என் மனதில், 'இனிமேல் இது எனக்கு தேவையில்லை. அவற்றை பயன்படுத்தப்போவதில்லை என்றே தோன்றியது'. அதனை பயிற்சியாளரிடம் எப்படி சொல்வதும் என்பதும் தெரியவில்லை.

கடந்த 12-15 வருடங்களில் நான் செய்த ஒரே விஷயம் கிரிக்கெட் விளையாடுவதுதான். ஓய்வுக்கு பின் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கப்போவதில்லை. நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது. அது காமன்வெல்த் போட்டியாகட்டும் அல்லது ஒலிம்பிக் போட்டியாகாகட்டும். நீங்கள் எந்த விளையாட்டை விளையாடினாலும், நீங்கள் உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அதனால் நான் கிரிக்கெட்டிலிருந்து விலகியவுடன், என்னால் அதைச் செய்ய முடியாது. என்னால் நாட்டுக்கு எந்தப் பெருமையையும் கொண்டு வர முடியாது. நான் ஓய்வுபெற முடிவெடுத்த தருணத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது" என நெகிழ்வுடன் குறிப்பிட்டார் தோனி.

இதே நிகழ்வில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது குறித்தும் சூசகமாக பேசினார் தோனி. இந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றபோது முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட தோனி அதற்காக அறுவை சிகிச்சை எடுத்து கொண்டார். இதனால் ஐபிஎல்லில் அவர் மீண்டும் பங்கேற்பது குறித்து சந்தேகங்கள் இருந்துவந்த நிலையில் அதனை தீர்க்கும்விதமாக பெங்களூரு நிகழ்வில் பேசினார். அதில், "முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. காயத்தில் இருந்து குணமாகி வருகிறேன். தற்போது தினசரி வழக்கத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நவம்பர் மாதத்துக்குள் முழுமையாக குணமாகிவிடுவேன் என மருத்துவர் தெரிவித்துள்ளார்" எனக் கூறினார் தோனி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x