Published : 26 Oct 2023 04:49 PM
Last Updated : 26 Oct 2023 04:49 PM

ஆசிய பாரா விளையாட்டு: 73+ பதக்கங்களை வென்று இந்தியா புதிய சாதனை!

ஹாங்சோ: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு 73 பதக்கங்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் போட்டியின்போது இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 17 பதக்கங்கள் கிடைத்தன.

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. முன்னதாக, 2018-ல் இந்தோனேசியாவில் 72 பதக்கங்களை வென்றதே இதுவரை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்கள் ஆகும். தற்போது இதனை முறியடித்துள்ளது இந்தியா.

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா 73 பதக்கங்களை பெற்றுள்ளது. இதன்மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி வரலாற்றில் அதிகப் பதக்கங்களை வென்றுள்ளது. இதேபோல் அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற சாதனையும் தற்போதைய தொடரில் முறியடித்துள்ளது இந்தியா. 2018-ல் 15 தங்கப் பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. இன்று, ஆடவருக்கான ஷாட் புட் போட்டியில் இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி தங்கம் வென்றதன் மூலம் 16 தங்கப் பதக்கங்களை பெற்று புதிய சாதனை படைத்தது.

இதையடுத்து, இந்திய பாரா விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். "இந்த சாதனையானது, எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய வெளிச்சமாக அமையட்டும்" என்று தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x