Published : 25 Oct 2023 09:06 PM
Last Updated : 25 Oct 2023 09:06 PM

ODI WC 2023 | மேக்ஸ்வெல் சாதனை சதம் - நெதர்லாந்தை 309 ரன்களில் வென்றது ஆஸ்திரேலியா

புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், மிட்செல் மார்ஷ் விரைவாகவே வெளியேறி இம்முறை ஏமாற்றினாலும், வார்னர் - ஸ்மித் கூட்டணி நெதர்லாந்தை சிதறடித்தது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். ஸ்மித் 71 ரன்கள் சேர்த்து அவுட் ஆக, டேவிட் வார்னர் தொடர்ந்து இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

உலகக் கோப்பையில் வார்னரின் 6வது சதம் இதுவாகும். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 6 சதங்கள் அடித்திருந்த சச்சினின் சாதனையை சமன்செய்தார். மார்னஸ் லபுசேன் 62 ரன்களுக்கும், வார்னர் 104 ரன்களுக்கும் விக்கெட்டான பின்னர், கிளென் மேக்ஸ்வெல் அதிரடி காண்பித்தார்.

முதல் 7 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த மேக்ஸ்வெல் அடுத்த 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக எடுக்கப்பட்ட சதம் இதுவாகும். நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் 49 பந்துகளில் எடுத்த சதமே உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக எடுக்கப்பட்ட சதமாக இருந்தது. அதனை 18 நாளில் முயறியடித்தார் மேக்ஸ்வெல்.

இறுதியில், 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்தார். நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட் வீழ்த்தினார்.

400 ரன்கள் இலக்கை துரத்திய நெதர்லாந்து 90 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் உட்பட யாரும் பெரிதளவு சோபிக்கவில்லை. ஓப்பனிங் இறங்கி நிதானமாக ஆடிய விக்ரம்ஜித் சிங் 25 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன்பின் வந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால், 90 ரன்களில் நெதர்லாந்து அணி சுருண்டது. இதன்மூலம் 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட் வீழ்த்தினார். இதேபோல் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x