Published : 25 Oct 2023 05:48 PM
Last Updated : 25 Oct 2023 05:48 PM
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார். இவர், இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றிய இரண்டு முடிவுகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அது, 1988-ல் மும்பை ரஞ்சி டிராபி அணிக்காக சச்சின் டெண்டுல்கரைத் தேர்வு செய்ய பரிந்துரைத்தது. மற்றொன்று, 2007 டி20 உலகக் கோப்பைக்கு எம்எஸ் தோனியை இந்திய அணியின் கேப்டனாக நியமித்தது.
சமீபத்தில் நடந்த 'தி லார்ட்ஸ் ஆஃப் வான்கடே' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், இந்த இரண்டு சம்பவங்களையும் நினைவுகூர்ந்துள்ளார் வெங்சர்க்கார். சச்சினை பார்த்த தருணத்தை விவரித்த அவர், “எனது 100-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பார்சி ஜிம்கானாவில் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது மறைந்த முன்னாள் வீரர் வாசு பரஞ்சபே, என்னிடம் வந்து சச்சின் என்ற 14 வயது சிறுவனைப் பார்க்க வரவேண்டும் என்றார். டீ குடிக்கச் சென்றபோது சச்சின் விளையாடும் போட்டியை பார்க்கச் சென்றேன். அந்த போட்டியில் சச்சின் 300 ரன்கள் எடுத்தார்.
அதன்பின், சச்சினை இந்திய அணிக்கான நெட் பயிற்சியில் பங்கேற்க செய்ய வேண்டும் என வாசு சார் என்னிடம் வலியுறுத்தினார். ஆனால், சச்சின் 'பார்ப்பதற்கு சின்ன பையன்' போல் இருப்பதாக எனக்கு தோன்றியது. எனது எண்ணத்துக்கு மாறாக, இந்திய அணியின் முக்கிய பவுலர்களான கபில்தேவ், அர்ஷத் அயூப் போன்றோருக்கு எதிரான சச்சின் மிகவும் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தார்.
அதேநாளில் மும்பை ரஞ்சி கோப்பை அணிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது. அதில் சச்சினை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். ஆடும் லெவனில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் அணியிலாவது தேர்வு செய்ய வற்புறுத்தினேன். அதன்படி, குஜராத் அணிக்கு எதிராக அறிமுக போட்டியில் சதம் அடித்த சச்சின், துலீப் டிராபி மற்றும் இரானி டிராபியிலும் சதம் அடிக்க பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டானது. இதன்பின் நடந்தவை அனைத்தும் வரலாறு" என நெகிழ்ந்தார் வெங்சர்க்கார்.
தோனியைப் பற்றி பேசுகையில், "தோனி அதற்கு முன் மாநில அணி உட்பட எந்த அணியையும் கேப்டனாக வழிநடத்தியதில்லை. ஆனால், நாங்கள் அவரை டி20 உலகக் கோப்பைக்கு கேப்டனாக தேர்வு செய்தோம். ஏனெனில் தோனி மிகவும் ஆக்ரோஷமானவர். பாசிட்டிவ் மனநிலை கொண்டவர். அவரை கேப்டனாக்க அனைவரும் உடனடியாக சம்மதித்தனர்" என அப்போது நடந்த நிகழ்வுகளை பற்றி மனம் திறந்தார் திலீப் வெங்சர்க்கார்.
முன்னதாக, சில மாதங்கள் முன்பு எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கதையை இதே திலீப் வெங்சர்க்கார் பகிர்ந்திருந்தார். அதில், "சச்சினின் பரிந்துரை, 2007 டி20 உலககோப்பை வெற்றியைத் தாண்டி தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட அவரிடம் இருந்த தலைமை பண்பே காரணம். கிரிக்கெட் குறித்த புரிதல், அறிவு மற்றும் உடல் மொழி, அணியை முன்னணியில் இருந்து வழிநடத்தும் திறன் ஆகியவை தோனியிடம் இருந்து எங்களை கவர்ந்தன. தோனி ஆட்டத்தை அணுகும் விதத்தையும், மற்ற வீரர்களுடன் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை நாங்கள் கவனித்தோம். இதில் எங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்தன. இதுவும், தோனி கேப்டனாக நியமிக்கப்பட முக்கிய காரணிகளாக அமைந்தன" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT