Published : 25 Oct 2023 03:49 PM
Last Updated : 25 Oct 2023 03:49 PM

ரோகித் கேப்டன்சியின் ‘சிறந்த நகர்வு’ - பாகிஸ்தான் குறித்த மைக்கேல் வாகனின் கலாய் வீடியோ வைரல்

சென்னை: ‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடரில் கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடின. இதில் இந்தியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்கு பிறகு மிக்கி ஆர்தர் தனது கருத்தை தெரிவித்தார். மிக்கி ஆர்தர், "நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இது ஐசிசி நிகழ்வு போல் அல்ல. பிசிசிஐ நிகழ்வு போல இருந்தது. இருதரப்பு தொடர்போல் இருந்தது. மைதானத்தில் 'தில் தில் பாகிஸ்தான்' சப்தம் கேட்கவே இல்லை" எனக் கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், மிக்கி ஆர்தரின் இந்தக் கருத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்க்கும்விதமாக பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சென்னையில் ஆப்கானிஸ்தான் அணியுடனான பாகிஸ்தான் தோல்விக்கு பின் இந்த வீடியோ வெகுவாக பகிரப்பட்டுவருகிறது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் பாட்காஸ்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கில்கிறிஸ்ட் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருப்பார். அப்போது மைக்கேல் வாகன் குறுக்கிட்டு, "ரோகித் சர்மாவின் திறமை குறித்து சரியாக சொன்னீர்கள் கில்கிறிஸ்ட். மைதானத்தில் வீரர்களை பயன்படுத்திய விதம், குறிப்பாக சிராஜுக்கு கூடுதல் ஓவர்களை வழங்கி ஊக்கப்படுத்தியது ரோகித் கேப்டன்சிக்கு உதாரணம். பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டதை சொன்னீர்கள்.

இந்தத் தருணத்தில் நான் கூற விரும்புவது, ஒன்றுதான். அது பாகிஸ்தான் அணியின் நிர்வாக இயக்குநர் மிக்கி ஆர்தர் கூறியதுபோல், "தில் தில் பாகிஸ்தான்" பாடலை ஒலிபரப்ப வேண்டாம் என டிஜேவிடம் கூறியதுதான் ரோகித் கேப்டன்சியின் முக்கிய நகர்வு. அந்தப் பாடல் ஒலிபரப்பப்படாது தான் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணம் என மிக்கி ஆர்தரே ஒப்புக்கொண்டுள்ளார். இதனை முன்பே தெரிந்துகொண்டுதான் உத்வேகம் தரும் அப்பாடலை பாகிஸ்தான் அணியினர் கேட்கக்கூடாது என்பதை புரிந்துகொண்ட ரோகித் டிஜேவிடம் 'தில் தில் பாகிஸ்தான்' பாடலை ஒலிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். உண்மையில் இது ரோகித்தின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. ஏனெனில் பெரும்பாலான கேப்டன்கள் டிஜேக்கள் குறித்து யோசிப்பது இல்லை. ஆனால் அந்த விஷயத்தில் ரோகித் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார்'' எனக் கலாய்த்தார். இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகிவருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x