Last Updated : 25 Oct, 2023 06:50 AM

1  

Published : 25 Oct 2023 06:50 AM
Last Updated : 25 Oct 2023 06:50 AM

நேர்த்தி, கலைநுணுக்கம் கூடிய சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி

பிஷன் சிங் பேடி

நேர்த்தி, கலைநுணுக்கத்துடன் பந்துவீசக் கூடிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பாராட்டைப் பெற்றவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.

இந்திய கிரிக்கெட் அணி 70-களுக்கு முன்னால் சுழற்பந்து வீச்சுக்கு மட்டுமே பெயர் பெற்றது. கபில்தேவ் வரவுக்குப் பின்னரே வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் உருவானார்கள். 1970-க்கு முன்பு வரை பெயருக்கு 5 முதல் 10 ஓவர்கள் வரை வேகப்பந்து வீச்சாளர்களை பந்துவீச விடுவர். அதன் பின்னர் பந்து தேயவேண்டும் என்பதற்காக பந்து விக்கெட் கீப்பரிடம் சென்ற பின்னர் பந்தை தரை வழியாக உருட்டிவிட்டு பந்துவீச்சாளரிடம் தருவார்கள். இது எதற்காக என்றால், பந்தின் வழவழப்புத் தன்மை குறைந்து சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதற்கு ஏதுவான வகையில் மாறவேண்டும் என்பதற்காகத்தான். சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை நல்ல முறையில் சுழற்றி வீசுவதற்கு `கிரிப்’ தேவை. அதற்காகவே அப்போது இந்திய அணி வீரர்கள் பந்தை தரையில் உருட்டி விடுவர்.

அவ்வாறு தரப்படும் புதிய பந்திலும் விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தவர் சுழற்பந்து சிங்கம் என்று அழைக்கப்படும் பிஷன் சிங் பேடி. இந்திய அணியில் அப்போது நான்கு பேர் அடங்கிய `நால்வர்' சுழற்பந்து வீச்சுக் கூட்டணி இருந்தது. பிஷன் சிங் பேடி, எர்ரப்பள்ளி பிரசன்னா, பகவத் சந்திரசேகர், ஸ்ரீநிவாச வெங்கட்ராகவன் ஆகியோர்தான் அந்த நால்வர். இதில் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர்தான் பிஷன் சிங் பேடி.

இந்திய அணிக்காக 1966 முதல் 1979 வரை 77 போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்களைக் கைப்பற்றியவர். மேலும் 10 ஒரு நாள் போட்டிகளில் 7 விக்கெட்களைச் சாய்த்திருந்தார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்டில் 98 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஒரு இன்னிங்ஸில் 14 முறை 5 விக்கெட்களையும், டெஸ்ட் போட்டிகளில் (2 இன்னிங்ஸ்களையும் சேர்த்து) ஒரு முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். முதல் தரப் போட்டிகளில் 1,560 விக்கெட்களைக் கைப்பற்றிய பெருமை உடையவர் பேடி. இடது கை சுழற்பந்து ஜாம்பவானான பிஷன் சிங், 22 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார்.

அப்போதைய கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக அதிக விக்கெட்களை வேட்டையாடியவர். 1990-களில் இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றினார். கிரிக்கெட்டுக்காக இவர் செய்த சாதனைகளைப் பாராட்டி இவருக்கு 1970-ல் பத்ம விருதும், 2004-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதும் வழங்கப்பட்டது.

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் தனது 77-வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 1946-ல் பிறந்தவர் பிஷன் சிங். 19 வயதிலேயே இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்துவிட்டார். விரைவிலேயே அணியில் முக்கிய இடத்தைப் பிடித்து இந்திய அணியின் கேப்டன் பதவியையும் பெற்றார்.

அவரது சிறப்பு வாய்ந்த பந்துவீச்சும், ஃபீல்டிங் செய்யும் விதமும் அலாதியானவை. சுழற்பந்து வீச்சு நால்வர் கூட்டணியில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். டெஸ்ட் போட்டிகள், ரஞ்சி போட்டி என பலவற்றிலும் முத்திரையைப் பதித்தவர். சக வீரர்களால் சோர்வில்லாத மனிதர் என்று பாராட்டப்பட்டவர். களத்தில் எவ்வளவு நேரம் இருந்தாலும் சோர்வடையவே மாட்டார். மேலும் சக வீரர்களையும் உற்சாகத்துடனேயே வைத்திருப்பார். தொடர்ச்சியாக ஓவர்களை வீசுமாறு கேப்டன் பணித்த போதிலும் சளைக்காமல் பந்துகளை வீசுபவர்.

ஒருமுறை 1973-ல் அவர் பிரிட்டனுக்குச் சென்று கவுன்ட்டி போட்டிகளிலும் விளையாடினார். நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாடிய அவர் அங்கு அனைத்து சக அணி வீரர்களாலும் பாராட்டுகளைப் பெற்றவர்.

864 ஓவர்கள்: ஒரு சீசனில் நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 864 ஓவர்களை வீசினார். அந்தநாட்டு வீரர்களை விட அதிகஅளவில் அந்த நேரத்தில் ஓவர்களை வீசி பாராட்டுகளைக் குவித்தார். பின்னர் அந்தசீசனை முடித்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து டெஸ்ட் உள்ளிட்ட முதல் தரப் போட்டிகளில் பங்கேற்று 700-க்கும் அதிகமான ஓவர்களை வீசினார். இதை இதுவரை யாருமே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைப் போன்று நேர்த்தியாகவும், கலைநுணுக்கத்துடனும் பந்துவீசும் சுழற்பந்து வீச்சாளர்கள் யாருமே இல்லை என்ற பாராட்டைப் பெற்றவர்.

பந்துகளை `ஃபிளைட்' செய்வதில் வல்லவர் என்று பெயர் பெற்றவர். அதனால்தான் இப்போதும் அவர் `மாஸ்டர் ஆஃப் ஃபிளைட்' என்று அழைக்கப்படுகிறார். அவரது ஃபிளைட் பந்துவீச்சை, அடிப்பதற்கு அப்போதைய சிறந்த பேட்ஸ்மேன்களும் பயப்படுவர். சிறந்த பேட்ஸ்மேன்களையும் அவரது பந்துவீச்சு ஏமாற்றி விக்கெட்டைப் பறித்துவிடும்.

ஒரு முறை பிஷன் சிங் பேடி தனது பந்துவீச்சு குறித்து கூறும்போது, “யாராவது ஒருபேட்ஸ்மேன் என்னுடைய அனைத்து பந்துகளை சிக்ஸருக்கு விளாச வேண்டும் என்று விரும்புகிறேன். நான் வீசும் பந்துகள் மீது தாக்குதலை பேட்ஸ்மேன் தொடுத்தால் எனக்கு மகிழ்ச்சி. இதற்கு அர்த்தம் அவரை நான் ஆட்டமிழக்கச் செய்துவிடுவேன் என்பதுதான். என் பந்துவீச்சு மீது அவர் தாக்குதல் தொடுக்கிறார். நான் அவரது விக்கெட்டை பறிக்க தாக்குதல் நடத்துகிறேன். அதுதான் கிரிக்கெட்டின் சாராம்சம். அதைத்தான் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள்" என்றார்.

மிகவும் அமைதியான மனிதரான பேடி,உடற்பயிற்சி செய்வதில் அலாதி ஆர்வமுடையவர். கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்கள் வாசிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். சக வீரர்கள் அவரை பாஜி (பெரிய அண்ணன்) என்றுசெல்லமாக அழைப்பர். அவரைப் போலவே,அவரது பந்துவீச்சு எப்போதுமே தனித்துவமானது. என்று கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூறுவதுண்டு. அவரது மறைவு பெரிய இழப்பு என்று கபில்தேவும், தந்தையைப் போன்றவர் பேடி என்று சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x