Published : 23 Oct 2023 05:00 PM
Last Updated : 23 Oct 2023 05:00 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி இன்று (அக்.23) காலமானார். அவருக்கு வயது 77.
ஸ்பின்னராக பிஷன் சிங் பேடி 1967 தொடங்கி 1979 வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வரலாற்றில் ஒரு வகையான புரட்சியை உருவாக்கியவர் பேடி. மேலும் இந்தியாவின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.
22 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடியுள்ளார். எரபள்ளி பிரசன்னா, பி.எஸ்.சந்திரசேகர் மற்றும் எஸ்.வெங்கடராகவன் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் பேடி. 1975 உலக கோப்பை போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவை 120 ரன்களுக்குள் கட்டுப்படுத்த உதவியது பிஷன் சிங் பேடியின் பந்துவீச்சு. அமிர்தரஸில் பிறந்த இவர், மொத்தமாக 370 போட்டிகளில் விளையாடி 1,560 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 1970-ம் ஆண்டு பிஷன் சிங் பேடிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
1990களில் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்திய அணியில் இருந்து விலகிய பிறகு, பேடி சில மாநில அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தார். 1992-93 சீசனில் பஞ்சாப் அணி ரஞ்சி டிராபி கோப்பையை வெற்றி கொள்வதற்குக் காரணமாக இருந்தார். இந்நிலையில் நீண்ட நாள் உடல்நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்தவர் இன்று காலாமானார். அவருக்கு கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவுதம் கம்பீர் இரங்கல்: “பிஷன் சிங் பேடியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கடவுள் வலிமை தரட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெய்ஷா இரங்கல்: “பிஷன் சிங் பேடியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்திய கிரிக்கெட் அதன் ஐகானை இழந்துள்ளது. பேடி கிரிக்கெட்டின் சகாப்தத்தை வரையறுத்தார். மேலும் அவர் ஒரு சுழற்பந்து வீச்சாளராக விளையாட்டில் ஓர் அழியாத முத்திரையைப் பதித்தார். இந்தக் கடினமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய பிரார்த்தனைகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT