Published : 23 Oct 2023 01:21 PM
Last Updated : 23 Oct 2023 01:21 PM

ODI WC 2023 | சச்சினின் உலக சாதனையை முறியடிக்க விராட் கோலி அவசரம் காட்டுவது ஏன்?

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 49 சதங்களை எடுத்து உலக சாதனையை வைத்துள்ளார். விராட் கோலி இன்னும் 2 சதங்கள் எடுத்தால் சச்சின் சாதனையைக் கடந்து ஒருநாள் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனராவார் கிங் கோலி. ஆனால் இந்த உலகக்கோப்பையிலேயே அதைச் சாதிக்கத் துடிக்கும் அவசரத்தைப் பார்த்தால் சில ஊகங்களை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

கோலியின் வயது 34 ஆண்டுகள் 352 நாட்கள். இன்னும் 13 நாட்கள் சென்றால் 35 வயது. அன்று புனேயில் வங்கதேசத்துக்கு எதிராக 70 ரன்களை எட்டியவுடனேயே தன் சதத்துக்கான வாய்ப்பை கண்டு கொண்ட விராட் கோலி விறுவிறுவென சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விளாசினார். புனே ரசிகர்கள் சீட் முனைக்கு வந்து விட்டனர். கடைசியில் நசும் அகமது பந்தை மிட் விக்கெட்டில் ஒரே தூக்குத் தூக்கி சிக்சர் விளாசி சதத்தையும் வெற்றியையும் சாதித்தார் கோலி, அது 48வது சதம்.

நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக வங்கதேசம் போல் அத்தனை சுலபமாக இருக்கவில்லை ஆட்டம். கொஞ்சம் நெருக்கமாகச் சென்றது. நியூஸிலாந்து ஷமியின் அட்டகாசமான பவுலிங்கினால் 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு குறுக்கப்பட்டது. இல்லையெனில் ஸ்கோர் இன்னும் 25 ரன்கள் கூடுதலாகவே சென்றிருக்கும். இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.

இந்திய அணி பேட்டிங்கின் போதும் 191/5 என்று 34ஆவது ஓவர் வரை திணறிக் கொண்டிருந்தது. சூர்யகுமார் ரன் அவுட் ஆனதும் கொஞ்சம் கவலை ஏற்பட்டது. அவரது ரன் அவுட்டில் கோலியின் பங்கும் உண்டு. ஆனால் விராட் கோலி நிற்கிறாரே, உண்மையான பினிஷர்! அதனால் எப்படியும் கோலி சேஸ் செய்யாமல் விடமாட்டார் என்ற நம்பிக்கையும் ட்ரஸ்ஸிங் ரூமில் இருந்தது. ஆனால் அவர் சதம்வரை போவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

நேற்றும் விராட் கோலி அதே அவசரம் அவசரமாக 70 ரன்களுக்குப் பிறகு சதம் நோக்கி விரைவில் முன்னேறினார். அன்று ராகுல் உறுதுணையாகச் செயல்பட்டது போல் நேற்று ஜடேஜா செயல்பட்டார். இதில் ஒன்றும் தவறில்லை. வெற்றி பெற வைப்பவர், ஒரு லெஜண்ட் தன் சொந்த சாதனைக்காகவும் விளையாடுவதில் தவறில்லை. இதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. ஆனால் நேற்று அவர் ட்ரெண்ட் போல்ட்டை ஒரு அற்புதமான சிக்சரையும் அருமையான பவுண்டரியையும் அடித்த போது சச்சின் டெண்டுல்கரின் 49 சத சாதனை சமன் ஆகிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கோலியும் 95 ரன்களுக்கு வந்து விட்டார். ஆனால் மேட் ஹென்றி சதத்தை மறுத்தார். ஒரு துல்லிய ஸ்லோ பந்தை வீச கோலி அதனை கிளென் பிலிப்ஸ் கையில் கொடுத்து விட்டு வெளியேறினார்.

இப்போது 49, 50வது சதங்கள் காத்திருக்க வேண்டியதுதான். இந்த வெற்றியின் மூலம் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி இன்னும் தோற்கடிக்கப்படாத அணியாக முதலிடத்தில் உள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்புகள் கைகூடி வருவதாகவே தெரிகிறது. அதோடு விராட் கோலி உலக சாதனை எதிர்பார்ப்புகளும் கூடியுள்ளது.

ஆனால் ஏன் இந்த உலகக்கோப்பைக்குள்ளேயே சச்சின் சாதனையை முறியடித்து விடவேண்டும் என்று கோலி துடிக்கிறார்? இந்தக் கேள்விக்கான ஊக விடை என்னவாக இருக்க வாய்ப்புள்ளதென்றால் 3 வடிவங்களில் ஏதாவது ஒரு வடிவத்திலிருந்து இந்த உலகக்கோப்பை வெற்றியுடன் தன் சாதனையையும் நிறைவேற்றிய கையோடு ஒருநாள் போட்டிகளிலிருந்து கோலி ஓய்வு அறிவிக்கவிருக்கிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

ஏற்கெனவே விரேந்திர சேவாக், இந்த உலகக் கோப்பையை இந்தியா வென்றால் 2011 உலகக் கோப்பையை வென்ற போது சச்சினை வீரர்கள் தோளில் சுமந்தது போல் கோலியை சுமந்து செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். சச்சின் டெண்டுல்கர் 2011 உலகக் கோப்பையோடு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதே போல் இந்த உலகக் கோப்பையோடு தானும் ஓய்வு பெற விராட் கோலி ஒருவேளை முடிவெடுத்திருக்கலாம். ஒரு வயதுக்கு மேல் 3 வடிவங்களிலும் ஆட முடியாது. டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய தேவை இல்லை. ஆனால் இப்போதெல்லாம் ஒருநாள் தொடர்கள் அரிதாகி வருவதால் இந்த வடிவத்தின் உச்சமான உலகக் கோப்பை ஒன்றை வென்று விட்டு ஓய்வு பெறுவது என்பது கோலியின் எண்ணமாக இருக்கலாம்.

ஏனெனில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 2 -3 ஆண்டுகள் ஆடி அதிலும் கொடி நாட்ட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின், முன்னாள், இந்நாள் வீரர்களின் ஆசையாக இருக்க முடியும். ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்று விட்டால், டெஸ்ட் போட்டிகளில் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு விராட் கோலி கையில் கேப்டன்சியையும் கொடுத்து ஒரு நல்ல டெஸ்ட் அணியை ஆக்ரோஷமான அணியை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பையும் ஒப்படைக்கலாம் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x