Published : 22 Oct 2023 06:15 PM
Last Updated : 22 Oct 2023 06:15 PM

ODI WC 2023 | டேரில் மிட்செல் அதிரடி; சமி மிரட்டல் பவுலிங்: இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு

தரம்சாலா: நடப்பு உலக கோப்பை தொடரின் 21வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 273 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டேரில் மிட்செல் மட்டும் 130 ரன்களை குவித்தார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்தியா- நியூசிலாந்து இடையிலான லீக் போட்டி தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களா டெவோன் கான்வே, வில் யங் களமிறங்கினர். பும்ராவின் முதல் ஓவரில் இந்த இணை ரன் எதுவும் எடுக்காததால் மெய்டன் ஆனது.

ஆட்டத்தில் 4ஆவது ஓவரை வீசிய பும்ரா, டெவோன் கான்வேவை டக்அவுட்டாக்கினார். பவர்ப்ளேவுக்குள் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்தது. அடுத்து முஹம்மது சமி வீசிய 9வது ஓவரில் வில் யங் 17 ரன்களில் விக்கெட்டாகி வெளியேறினார். 10 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

3வது விக்கெட்டுக்கு கைகோத்த ரச்சின் ரவீந்திரன் - டேரில் மிட்செல் இணை இந்தியாவின் பவுலிங்கை பதம் பார்த்தது. கிட்டத்தட்ட 20 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துகொண்ட இந்த பாட்னர்ஷிப்பை முஹம்மது சமி உடைத்தார். 34வது ஓவரில் ரச்சின் ரவீந்திரன் 75 ரன்களில் அவுட்டாகி கிளம்பினார். அடுத்து வந்த டாம் லாதம் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நின்று ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து அசத்த நியூசிலாந்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

விக்கெட்டுகள் இழப்பை தவிர்த்து டேரில் மிட்செல் - க்ளென் பிலிப்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிக்சர் விளாசி அதிரடி காட்ட முயன்ற க்ளென் பிலிப்ஸை 23 ரன்களில் குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார். மார்க் சாப்மேன் 6 ரன்களில் கிளம்ப நியூசிலாந்து தடுமாறியது. 48-வது ஓவரில் மிட்செல் சாட்னர் மற்றும் மாட் ஹென்றி அடுத்தடுத்த பந்துகளில் போல்டாக முஹமத்து சமி ஆதிக்கம் செலுத்தினார். யார் வந்தாலும் போனாலும் டேரில் மிட்செல் ஒரே ஆளாக மறுபுறம் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்தார்.

இறுதி ஓவரில் டேரில் மிட்செல் அடித்த பந்து விராட் கோலி கைக்குள் அடக்கமானதும் மிட்செல் கிளம்பினார். இருப்பினும் 130 ரன்களை குவித்தவர் அணிக்கு பலம் சேர்த்தார். இறுதிப் பந்தில் லாக்கி பெர்குசன் ரன் அவுட்டாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 273 ரன்களைச் சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முஹம்மது சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆடமுடியாத நிலையில், அவருக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட சமி ப்ளேயிங் லெவனில் தேர்வு செய்ததற்கான நியாயத்தை சேர்த்தார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், பும்ரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x