Published : 22 Oct 2023 02:49 PM
Last Updated : 22 Oct 2023 02:49 PM
தரம்சாலா: நடப்பு உலக கோப்பை தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்தியா- நியூசிலாந்து இடையிலான லீக் போட்டி தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (ஞாயிறு) மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே, வில் யங் களமிறங்கினர்.
பும்ராவின் முதல் ஓவரில் இந்த இணை ரன் எதுவும் எடுக்காததால் மெய்டன் ஆனது. ஆட்டத்தில் 4-வது ஓவரை வீசிய பும்ரா, டெவோன் கான்வேவை டக்அவுட்டாக்கினார். பவர்ப்ளேவுக்குள் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்தது. அடுத்து முஹம்மது சமி வீசிய 9வது ஓவரில் வில் யங் 17 ரன்களில் விக்கெட்டாகி வெளியேறினார். 10 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து நிதானமாக விளையாடி வருகிறது.
இந்தியா - நியூசிலாந்து: இரு அணிகளும் நடப்புத் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகின்றன. இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது 10 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்னால் இந்தப் போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT