Published : 21 Oct 2023 08:07 AM
Last Updated : 21 Oct 2023 08:07 AM

அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீள்வது யார்? - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

பட்லர் மற்றும் பவுமா

மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. இந்த இரு அணிகளுமே தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தன.

தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முதல் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக 428 ரன்களை குவித்து மிரளச் செய்திருந்தது. அந்த ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுதொடரை சிறப்பான முறையில் தொடங்கியிருந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆனால் 3-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 246 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் 207 ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தொடரை மோசமான தோல்வியுடனே தொடங்கி இருந்தது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் வீழ்ந்து இருந்தது. எனினும் வங்கதேச அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் மீண்டு வந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைவசப்படுத்தியது. ஆனால் 285 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்குஎதிரான ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இன்றைய ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீண்டு வருவதில் இரு அணிகளுமே முனைப்பு காட்டக்கூடும். நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்த போதிலும், தென் ஆப்பிரிக்கா அணிபலம் வாய்ந்ததாகவே திகழ்கிறது. இதனால் அனைத்து துறைகளிலும் தடுமாறி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த தென் ஆப்பிரிக்கா முயற்சி செய்யக்கூடும்.

இங்கிலாந்து அணியிடம் இருந்து சீரான திறன் வெளிப்படாதது பலவீனமாக உள்ளது. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களிலும் களமிறங்காத நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர், களமிறங்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த அணிக்கும் புதிய எழுச்சி கிடைக்கக்கூடும்.

கேப்டன் ஜாஸ் பட்லர் 3 ஆட்டங்களிலும் முறையே 43, 20 மற்றும் 9 ரன்களே சேர்த்தார். அவரது தரநிலைக்கு தகுந்தவாறு செயல் திறன் வெளிப்படவில்லை. பின்வரிசை பேட்டிங்கில் லியாம் லிவிங்ஸ்டனும் சோபிக்கவில்லை. 3 ஆட்டங்களிலும் அவர் முறையே 20, 0, மற்றும்10 ரன்களில் நடையை கட்டினார். ஜோ ரூட், டேவிட் மலான் ஆகியோர் மட்டுமே சீராக ரன்கள் சேர்த்து வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு சவால் கொடுக்கவேண்டும் என்றால் வலுவான அந்த அணியின் பந்து வீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கூட்டு முயற்சியுடன் உயர்மட்டசெயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

பந்து வீச்சிலும் ரீஸ் டாப்லே, மார்க் வுட், ஆதில் ரஷீத், சேம் கரண் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 20 விக்கெட்களை வேட்டையாடிய ஜோப்ராஆர்ச்சர் மாற்று வீரராக நேற்று இங்கிலாந்து அணியினருடன் இணைந்தார். எனினும் யாரேனும் காயம் அடைந்து தொடரில் இருந்து விலகினால் மட்டுமே ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவதற்கான சூழ்நிலை உருவாகும்.

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் குயிண்டன் டி காக், எய்டன் மார்க்ரம், ராஸி வான் டெர் டஸ்ஸன், ஹெய்ன்ரிச் கிளாசன்ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். தெம்பாபவுமா, டேவிட் மில்லர் ஆகியோரும் பலம்சேர்க்கக்கூடியவர்கள். இவர்கள், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு துறைக்கு அச்சுறுத்தல்கள் கொடுக்கக்கூடும். 7 விக்கெட்கள்வீழ்த்தியுள்ள காகிசோ ரபாடா, 6 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள மார்கோ யான்சன், 4 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள லுங்கி நிகிடி ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x