Last Updated : 15 Jan, 2018 03:48 PM

 

Published : 15 Jan 2018 03:48 PM
Last Updated : 15 Jan 2018 03:48 PM

21-வது சதம் எடுத்து கோலி மாஸ்டர் கிளாஸ் 153; அஸ்வின் அதிரடி 38: இந்தியா 307 ஆல் அவுட்

செஞ்சூரியன் மைதானத்தில் விராட் கோலி அபாரமான பதிலடி இன்னிங்சில் 21-வது சதத்தை எடுத்து முடித்து மேலும் தொடர்ந்து பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 153 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அஸ்வின் எதிர்த்தாக்குதல் இன்னிங்சில் 54 பந்துகளில் 38 ரன்களை எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

விராட் கோலி 217 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் எடுத்து மோர்னி மோர்கெல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடித்தார், ஆனால் ஷாட் சரியாகச் சிக்காமல் லாங் ஆனில் எளிதான கேட்ச் ஆனது. இத்துடன் இந்திய இன்னிங்ஸும் நிறைவுற்றது. 307 ரன்களில் கோலி 153 ரன்கள். பாதி ரன்களை இவரே எடுத்துள்ளார், ஒருவர் ஸ்டாண்ட் கொடுத்திருந்தால் கூட 400-க்கும் மேல் கொண்டு சென்றிருப்பார். தென் ஆப்பிரிக்காவுக்கு சிக்கல் அதிகமாகியிருக்கும்.

உணவு இடைவேளைக்குப் பிறகு இஷாந்த் ஷர்மா, மோர்னி மோர்கெலின் எகிறு பந்தை ஷார்ட் லெக்கில் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசியாக கிரேட் இன்னிங்ஸுக்குப் பிறகு விராட் கோலி 153 ரன்களில் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்னி மோர்கெல் 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் மற்ற பவுலர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

விராட் கோலியின் கிரேட் இன்னிங்ஸ்:

விராட் கோலி அபாரமான பதிலடி இன்னிங்சில் 21-வது சதத்தை எடுத்து முடித்து மேலும் தொடர்ந்து பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அஸ்வின் எதிர்த்தாக்குதல் இன்னிங்சில் 54 பந்துகளில் 38 ரன்களை எடுக்க உணவு இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.

கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது மிகச்சிறந்த சதங்களில் இது ஒன்றாக பேசப்படும் அளவுக்கு அற்புதமாக ஆடி 21வது சதத்தை எடுத்து உணவு இடைவேளையின் போது 141 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

பிட்ச் அறிக்கையில் முதல்நாள் பிட்ச் போல்தான் இருக்கிறது என்றனர் போலக்கும், கவாஸ்கரும், இன்னொரு கூடுதல் தகவல் புதிய பந்துக்கான பிட்ச் என்பதையும் இருவரும் தெரிவித்தனர். அதற்கேற்பவே அஸ்வின், ஷமி இருவரும் புதிய பந்து எடுத்தவுடன் ஆட்டமிழந்தனர்.

முன்னதாக இந்திய அணி இன்று தொடங்கிய போது ஹர்திக் பாண்டியா 15 ரன்கள் எடுத்த நிலையில் மிட் ஆனில் தட்டி விட்டு ஒரு ரன்னுக்காக ஓடி வந்தார், கோலி வேண்டாம் என்று திருப்பி அனுப்ப பிலாண்டர் நேர் த்ரோ ஸ்டம்பைத் தொந்தரவு செய்ய பாண்டியாவின் கால்களும் மட்டையும் தரையில் இல்லை. ரன் அவுட் ஆனார். கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடி ரன் அவுட் ஆகியிருக்கலாம்.

முன்னதாக விராட் கோலி அபாரமான தன் சதத்தை எடுத்து முடித்தார். 86 ரன்களில் இருந்த போது நிகிடி வீசிய பந்து ஒன்று  கல்லியின் இடது கையை ஏமாற்றி எட்ஜ் பவுண்டரி அடித்து 90 ரன்களுக்கு வந்தார். அடுத்த பந்து லேட் ஸ்விங் ஆக காலைப் போட்டு தன் பாணி ராஜகவர் ட்ரைவ் ஒன்றை அடித்து பவுண்டரிக்கு விரட்டி 94 ரன்களுக்கு வந்தார். அடுத்த பந்து,  முதல் இரண்டு பந்துகள் போல் அல்லாமல் குட் லெந்துக்கு சற்றே முன்னே பிட்ச் ஆகி வர எட்ஜ் ஆகி ஆம்லாவுக்கு முன்னதாக தரையில் விழுந்தது. இதே ஓவரில் கடைசி பந்தில் மிக அருமையாக நேர் ஷாட் ஒன்றை அடித்து 3 ரன்களை ஓடி எடுத்து 97 ரன்களுக்கு வந்தார். கடைசியில் நிகிடி பந்தை மிட்விக்கெட்டில் தட்டி விட்டு ஒரு ரன் ஓடி சதத்தை ஹெல்மெட்டை கழற்றி கொண்டாடிய போது ஓவர் த்ரோ என்பதைப் பார்த்து விட்டு கொண்டாட்டத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு 2வது ரன் ஓடி 101 ரன்கள் எடுத்தவுடன் தன் கொண்டாட்டத்தை தொடர்ந்தார்.

என்னதான் சாதகமான பிட்ச் என்றாலும் ஒரு தரமான பந்து வீச்சு, இறுக்கமான கள வியூகத்தில் ஏகப்பட்ட சவால்கள், முறையீடுகளுக்கு விட்டுக் கொடுக்காமல் 146 பந்துகளில் சதம் கண்டது கிரேட் பிளேயருக்கான விடயமாகும்.

அஸ்வின் களமிறங்கி பதற்றமாக ரபாடா பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்தார். பிறகு நிகிடியின் ஷாட், வைடு ஆஃப் திசை பந்தை முறையாக பாயிண்ட் பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த ஓவர் ரபாடாவை என்ன சேதி என்று கேட்டார் அஸ்வின், முதலில் கவர் திசையில் ஒரு பவுண்டரி, பிறகு மிட் ஆஃப், எக்ஸ்ட்ரா கவர் இடையில் தூக்கி அடித்து இன்னொரு பவுண்டரி. பிறகு மீண்டும் குட் லெந்த் பந்தை கவர் பவுண்டரிக்கு அனுப்பி ஆக்ரோஷம் காட்டினார். ரபாடாவையே மீண்டும் ஒரு தேர்ட்மேன் பவுண்டரி அடித்தார். கோலி, அஸ்வின் இணைந்து 62 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர். மஹராஜை மிட் ஆஃப் மேல் தூக்கி ஒரு பவுண்டரி அடித்து அஸ்வின் வேறு ஒரு மூடில் ஆடினார். பிறகு கோலி ஒரு அபார கவர் டிரைவ் ஆடி பவுண்டரி அடிக்க அதே ஓவரில் புதிய பந்தில் பிலாண்டர் பந்தை எட்ஜ் செய்ய டுபிளெசிஸ் பின்னால் அருமையாகப் பிடித்தார்.

மொகமது ஷமி 1 ரன் எடுத்து மோர்கெலிடம் எட்ஜ் ஆகி ஆம்லாவிடம் கேட்ச் ஆனார். மீண்டும் பிலாண்டரை கோலி நடந்து வந்து மிட் ஆஃபில் பவுண்டரி சாத்தினார். உணவு இடைவேளையின் போது 193 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார், இவருடன் இஷாந்த் சர்மா ரன் எடுக்காமல் நிற்கிறார். அஸ்வின், கோலி கூட்டணி சுமார் 14 ஒவர்களில் 7வது விக்கெட்டுக்காக 71 ரன்களைச் சேர்த்தது தென் ஆப்பிரிக்காவுக்கு நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x