Published : 20 Oct 2023 06:29 AM
Last Updated : 20 Oct 2023 06:29 AM
பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியானது உலகக் கோப்பை தொடரை சிறந்த வகையில் தொடங்கவில்லை. இந்தியாவுக்கு எதிரானமுதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்விஅடைந்தது. அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்த போதிலும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டு வந்தது.
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், அடுத்த ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையையும் வீழ்த்தியது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 191 ரன்களில் ஆட்டமிழந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன.
இலங்கை அணிக்கு எதிராக 345 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திய பாகிஸ்தான் அணியானது இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலுமே போராட்ட குணத்தை வெளிப்படுத்தத் தவறியது. எனினும் இந்தியாவுக்கு எதிரான போட்டியை போன்று கடும் அழுத்தம் இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கின் பார்ம் அணியின் செயல்திறனை பாதிப்பதாக உள்ளது. அவர், 3 ஆட்டங்களிலும் கூட்டாக 63 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதேபோன்று பாபர் அஸமின் மட்டை வீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் அடித்த அவர், நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். இதனால் இவர்கள் இருவரும் வலுவான பந்து வீச்சு வரிசையை கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நடுவரிசை பேட்டிங்கில் மொகமது ரிஸ்வானை மட்டுமே பெரிதும் சார்ந்திருப்பதற்கும் பாகிஸ்தான் அணிநிர்வாகம் தீர்வுகாண முயற்சி செய்யக்கூடும். நெதர்லாந்து அணிக்கு எதிராக அரை சதம் அடித்த சவுத்ஷகீல், அதிரடியாக செயல்படக்கூடிய இப்திகார் அகமது ஆகியோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளிக்கலாம்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் நசீம் ஷா இல்லாத குறை இன்னும் நீங்கவில்லை. 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடியிடம் இருந்து இந்தத் தொடரில் சிறந்த திறன் இன்னும் வெளிப்படவில்லை. போட்டி நடைபெறும் இன்றைய ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை ஷாகீன் ஷா அப்ரிடிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ஆல்ரவுண்டரும் துணை கேப்டனுமான ஷதப் கானிடம் இருந்து பேட்டிங், பந்து வீச்சில் எந்த ஒருகட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக உஷாமா மிர் களமிறக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது மேற்கொண்டு ஒரு தோல்வியை சந்தித்தாலும் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் தேக்கத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு முதல்படியாகவே அமைந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பார்மின்றி தவிப்பது அணியின் செயல்திறனை ஒட்டுமொத்தமாக முடக்கி உள்ளது. ஜோஷ் இங்லிஸை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடிக்கவில்லை. மேலும் 3 ஆட்டங்களிலும் கூட்டாக மார்னஷ் லபுஷேன் மட்டுமே 100 ரன்களை கடந்துள்ளார். டாப் 3 பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர் 65, ஸ்டீவ் ஸ்மித் 65, மிட்செல் மார்ஷ் 59 ரன்களே சேர்த்துள்ளனர்.
ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல்லிடம் இருந்தும் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. அவர், 3 ஆட்டங்களிலும் கூட்டாக 49 ரன்களே எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில்ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சிலும் பலவீனங்கள் காணப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆட்டத்தில் ஆடம் ஸம்பா 4 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யக்கூடும். மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசில்வுட் ஆகியோருக்கு உறுதுணையாக பாட் கம்மின்ஸ் செயல்படும் பட்சத்தில் 2-வது வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT