Published : 20 Oct 2023 12:50 AM
Last Updated : 20 Oct 2023 12:50 AM
புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-வது போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார்.
நடப்பு தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி, 259 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் சதம் அடங்கும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கோலி பதிவு செய்த இந்த சதத்துடன் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 78-வது சதங்களை பதிவு செய்துள்ளார். அதே போல 26,000 ரன்களை கடந்துள்ளார். உலகக் கோப்பை அரங்கில் அவர் பதிவு செய்துள்ள 3-வது சதம். உலகக் கோப்பை தொடரில் ரன்களை சேஸ் செய்த போது அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் இது.
“ஜடேஜாவுக்கு சேர வேண்டிய ஆட்ட நாயகன் விருதை நான் பறித்துக் கொண்டதற்கு மன்னிக்கவும். அணிக்கு பெரிய அளவில் பங்களிப்பு தர விரும்பினேன். உலகக் கோப்பை அரங்கில் அரை சதம் பதிவு செய்துள்ளேன். ஆனால், அதனை சதகமாக என்னால் மாற்ற முடியவில்லை. இந்த முறை அதை சரியாக செய்துள்ளேன்.
இந்தப் போட்டியில் ஆட்டத்தின் இறுதி வரை விளையாட வேண்டும் என முடிவுடன் இருந்தேன். அதனை நான் அணிக்காக கடந்த காலங்களில் நிறைய முறை செய்துள்ளேன். ஃப்ரீ ஹிட் மற்றும் பவுண்டரி, சிக்ஸர் என இந்த இன்னிங்ஸை தொடங்கினேன். இது ஒரு கனவுத் தொடக்கம் போன்றது. சொந்த மண்ணில் ரசிகர்கள் சூழ விளையாடுவது மகத்தான அனுபவமாக உள்ளது” என வெற்றிக்கு பிறகு ஆட்ட நாயகன் விருதை பெற்ற கோலி தெரிவித்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் விளாச கே.எல்.ராகுல் உதவி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT