Published : 19 Oct 2023 11:20 PM
Last Updated : 19 Oct 2023 11:20 PM
புனே: பாகிஸ்தான் பயணித்து கிரிக்கெட் தொடரில் விளையாடிய போது தன்னை ரசிகர் ஒருவர் இரும்பு ஆணியை எறிந்ததாக முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களை குறிவைத்து பார்வையாளர்கள் விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் தெரிவித்தது. இந்த சூழலில் இர்பான் பதான் இதனை தெரிவித்துள்ளார்.
2003 முதல் 2012 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடியவர் பதான். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மெட் போட்டிகளில் விளையாடி 2,821 ரன்கள் மற்றும் 301 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
“பாகிஸ்தானின் பெஷாவரில் நாங்கள் போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டு இருந்தோம். அப்போது திடீரென ரசிகர் ஒருவர் ஆணியை என் மீது எறிந்தார். அது எனது கண்ணுக்கு கீழே பட்டது. அதை நாங்கள் பெரிது செய்யவில்லை. அவர்களது விருந்தோம்பலை பாராட்டி இருந்தோம். இந்தியாவில் பார்வையாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பிரச்சினையாக மாற்றுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” என பதான் தெரிவித்துள்ளார். 2004 மற்றும் 2006 என இரண்டு முறை பாகிஸ்தான் பயணித்து கிரிக்கெட் தொடரில் விளையாயடிய இந்திய அணியில் பதான் இடம் பெற்றிருந்தார்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT