Last Updated : 29 Jul, 2014 12:17 PM

 

Published : 29 Jul 2014 12:17 PM
Last Updated : 29 Jul 2014 12:17 PM

புரட்சி பூமியிலிருந்து ஒரு காமன்வெல்த் சாம்பியன்

இந்திய விடுதைலக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூரைச் சேர்ந்த சதீஷ், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் சதீஷ் மொத்தம் 328 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 179 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம் புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்தார்.

முன்னதாக கடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நவ்ரௌவின் யூகோ பீட்டர் ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோ எடையைத் தூக்கியதே (2010 காமன்வெல்த்) போட்டி சாதனையாக இருந்தது. இப்போது அதை சதீஷ் முறியடித்துள்ளார்.

பயிற்சியாளர் நெகிழ்ச்சி

வேலூரில் 1990 முதல் 2014 வரை பளுதூக்குதல் பயிற்சியாளராக இருந்து பல்வேறு வீரர், வீராங்கனைகளை உருவாக்கியவர் நாகராஜன். அவர்களில் சதீஷும் ஒருவர். தற்போது சென்னை நேரு மைதானத்தில் உள்ள எஸ்டிஏடி விளையாட்டு விடுதியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

சதீஷ் தங்கம் வென்றது குறித்து நாகராஜனிடம் கேட்டபோது, “அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்த்தேன். எனது நண்பர்களிடமும் கூறியிருந்தேன். அவருக்கு ஒரேயொரு சவால் மற்றொரு இந்தியரான ரவி கட்லுதான். அதனால் கடும் சவால் இருக்கும் என நினைத்தேன். ஆனால் சதீஷ் மிகச்சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார். அவர் தங்கம் வென்றது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களில் பெரும்பாலானோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். முன்னாள் ராணுவ வீரரின் மகனான சதீஷ் இப்போது காமன்வெல்த் பளுதூக்குதலில் பதக்கம் வென்றிருக்கிறார். இந்த சதீஷின் வெற்றி மற்றவர்களிடம் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வீரத்தின் பிறப்பிடமான வேலூரில் இருந்து இன்னும் ஏராளமான சதீஷ்கள் (பளுதூக்குல் சாம்பியன்கள்) உருவெடுப்பார்கள் என நம்பலாம்.

அட்லஸ் ஜிம்மில் ஆரம்பித்த சதீஷின் பளுதூக்குதல் பயணம்

வேலூர் சத்துவாச்சாரியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அட்லஸ் ஜிம்மில் இருந்துதான் சதீஷின் பளுதூக்குதல் பயணம் ஆரம்பமாகியிருக்கிறது. அதன்பிறகு 2007-ல் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) சிறப்பு மேம்பாட்டு மையத்தில் (பளுதூக்குதல்) இணைந்தார் சதீஷ்.

அங்கு அப்போது பயிற்சியாளராக இருந்த நாகராஜனால் பட்டைதீட்டப்பட்ட சதீஷ் பள்ளிகள் இடையிலான போட்டிகளில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்களை குவித்தார். பின்னர் சப்-ஜூனியர், ஜூனியர் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்ற அவர், சீனியர் பிரிவுக்கு மாறினார்.

2011-ல் பெங்களூரில் நடைபெற்ற தேசிய சீனியர் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சதீஷ், 2011-ல் தெற்கு ரயில்வேயில் ஜூனியர் கிளர்க்காக பணியில் சேர்ந்தார். கடந்த 2011, 2012, 2013 ஆகிய 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ரயில்வே அளவிலான பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

இதேபோல் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் முதல்முறையாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சதீஷ், அதிலும் தங்கம் வென்று அவர் பிறந்த வேலூருக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x