Published : 19 Oct 2023 06:25 AM
Last Updated : 19 Oct 2023 06:25 AM
புனே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தி இருந்தது.
அதேவேளையில் வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் நடப்பு சாம்பியனான இங்கிலாந்திடம் 137 ரன்கள் வித்தியாசத்திலும், நியூஸிலாந்திடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா சிறந்த பார்மில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 131 ரன்களும் விளாசிய ரோஹித் சர்மாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி உள்ள ஷுப்மன் கில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்படத் தவறினார். இம்முறை அவரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன் களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 55 ரன்களும் விளாசிய விராட் கோலியும் பெரிய அளவிலான ரன் வேட்டை நிகழ்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசிய கே.எல்.ராகுல் ஆகியோர் நடுவரிசையில் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களிலும், பாகிஸ்தான் அணியை 191 ரன்களிலும் மட்டுப்படுத்திய இந்திய பந்து வீச்சாளர்கள் இன்றைய ஆட்டத்தில் மீண்டும் முத்திரை பதிக்கக்கூடும். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இதேபோன்று பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், குல்தீப் யாதவ் பலம் சேர்க்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர்.
கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் இந்திய அணியை 3 முறை வீழ்த்திய நம்பிக்கையுடன் களமிறங்குகிறது வங்கதேச அணி. 2022-ம் ஆண்டு நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு முறையும், கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 ஆட்டத்திலும் வங்கதேச அணி, இந்தியாவை வென்றிருந்தது. அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசன், இடது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப் பட்டு வருகிறார். இதனால் அவர், பயிற்சியின் போது பந்து வீசவில்லை. எனினும் போட்டிக்கு முன்னதாக அவர், முழு உடற்தகுதியை அடைந்துவிடுவார் என்று அணி வட்டாரங்கள் தெரிவித்தன.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஆகியோரிடம் இருந்து நிலையான ஆட்டம் வெளிப்படாதது அணியின் செயல்திறனை வெகுவாக பாதித்துள்ளது. இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அதனை பயன்படுத்தி நடுவரிசையில் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ, தவுஹித் ஹிர்டோய், முஸ்பிகுர் ரகிம் ஆகியோர் சீராக ரன்கள் சேர்க்க முயற்சிக்கக்கூடும். பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த முஸ்டாபிஸுர் ரஹ்மானிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படாததும் பலவீனமாக கருதப்படுகிறது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 2 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி உள்ளார். இதே நிலைமையில்தான் தஸ்கின் அகமதுவும் உள்ளார். தலா 5 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள ஷகிப் அல்ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், 4 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள மெஹிதி ஹசன் ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யக்கூடும்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவை நெதர்லாந்து அணியும் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளன. இதனால் இந்திய அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT