Published : 18 Oct 2023 06:41 AM
Last Updated : 18 Oct 2023 06:41 AM
சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை குவித்து 6 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வதுஇடத்தில் உள்ளது. அந்த அணிமுதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வதுஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும் தோற்கடித்து இருந்தது. தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
ஹஸ்மதுல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடமும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடமும் தோல்வி அடைந்திருந்தது. எனினும் 3-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தது.
காயம் காரணமாக கேன் வில்லியம்சன் களமிறங்காததால் மீண்டும் ஒரு முறை நியூஸிலாந்து அணி டாம் லேதம் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த ஐபிஎல் தொடரின் போது காயம் அடைந்திருந்த வில்லியம்சன் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக களமிறங்கவில்லை. வங்கதேச அணிக்கு எதிராக களமிறங்கிய அவர், 78ரன்கள் சேர்த்திருந்த போது விரல் பகுதியில் காயம் அடைந்தார். இதனால் அவர், அடுத்த 3 ஆட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது பின்னடைவாக இருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிராக துணிச்சலுடன் விளையாடி கணிக்க முடியாத அணியாக திகழ்ந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்று தொடரில் தனது 4-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது நியூஸிலாந்து அணி.
நியூஸிலாந்து அணியின் பேட்டிங் டாப் ஆர்டரை பெரிதும் நம்பி உள்ளது. வில் யங், டேவன் கான்வே, டேரில் மிட்செல், ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சீரான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இவர்களிடம் இருந்துமீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, மிட்செல் சாண்ட்னர், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் வலு சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 2 ஆட்டங்களில் அரை சதம் அடித்திருந்தார். ஹஸ்மதுல்லா ஷாகிதி, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், இக்ரம் அலிகில் ஆகியோரும் பேட்டிங்கில் பொறுப்புடன் செயல்பட்டால் நியூஸிலாந்து அணிக்குஅழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம்.
சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவர்கள் நியூஸிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும். இந்த சுழற்பந்து வீச்சு கூட்டணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட்களை வேட்டையாடி இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT