Published : 18 Oct 2023 06:50 AM
Last Updated : 18 Oct 2023 06:50 AM
சென்னை: தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கம் சார்பில் வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் மினி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
37-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் வரும் 25-ம்தேதி முதல் நவம்பர் 9-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில்தமிழகத்தில் இருந்து 446 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கான சீருடை வழங்குதல் மற்றும் வழியனுப்பு விழா தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கனேஷ், பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதாஉள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, “ தமிழகத்தை சேர்ந்தவீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற கனவு விரைவில் நனவாகும்.மேலும் அதற்கான முன்னோட்டமாக தற்போது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக பதக்கங்கள் வென்றுள்ளனர்.
அவர்களை கவுரவிக்கும் விதமாக விரைவில் பிரமாண்ட விழா நடத்தப்படும். ஒலிம்பிக்கில் இடம் பெறும் 36 விளையாட்டுகளையும் உள்ளடக்கிய வகையில் சென்னையில் மினி ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT