Published : 17 Oct 2023 11:03 PM
Last Updated : 17 Oct 2023 11:03 PM
தரம்சாலா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை 38 ரன்களில் வீழ்த்தி உள்ளது நெதர்லாந்து அணி. இது நடப்பு தொடரில் பெரிய அணிகளுக்கு வளந்து வரும் அணிகள் கொடுத்துள்ள இரண்டாவது அப்செட்டாக அமைந்துள்ளது. முன்னதாக, கடந்த 15-ம் தேதி இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக தலா 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. 43 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது நெதர்லாந்து. அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 69 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். 10 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அவரது இன்னிங்ஸில் அடங்கும். கடைசி 9 ஓவர்களில் 104 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.
8 ரன்களுக்கு 4 விக்கெட்கள்: 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது தென் ஆப்பிரிக்கா. இந்த சூழலில் அந்த அணியின் நான்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை மிக விரைவாக வீழ்த்தி இருந்தது நெதர்லாந்து. கேப்டன் பவுமா, டிகாக், வான்டர் டூசன், மார்க்ரம் ஆகியோரது விக்கெட்களை 21 பந்துகளுக்குள் வீழ்த்தி இருந்தது. அதாவது 7.6 முதல் 11.2 ஓவர்களுக்குள் அவர்களது விக்கெட்களை நெதர்லாந்து கைப்பற்றியது. இந்த நேரத்தில் வெறும் 8 ரன்கள் மட்டுமே நெதர்லாந்து கொடுத்ததிருந்தது. 44 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.
பின்னர் கிளாஸன் மற்றும் மில்லர் இணைந்து குட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் கிளாஸன், 28 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மார்கோ யான்சென், மில்லர் (52 பந்துகளில் 43 ரன்கள்), ஜெரால்டு கோட்ஸி (22 ரன்கள்), ரபாடா, கேஷவ் மகாராஜ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா.
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணிகளுக்கு அவ்வவ்போது நெதர்லாந்து சவால் அளித்துள்ளது. 2009-ம் ஆண்டு டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றி இருந்தது. தற்போது அதனை ஒருநாள் கிரிக்கெட் வடிவிலும் செய்துள்ளது. தரமான பவுலிங் மற்றும் ஃபீல்டிங் மூலம் இந்த வெற்றியை நெதர்லாந்து சாத்தியம் ஆக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT