Published : 17 Oct 2023 07:22 AM
Last Updated : 17 Oct 2023 07:22 AM
மும்பை: கிரிக்கெட் உட்பட 5 விளையாட்டுகள் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141-வது அமர்வு மும்பையில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த அமர்வில் நேற்று, 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 5 புதிய விளையாட்டுகளை சேர்ப்பதற்கு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழு பரிந்துரைத்துள்ள ஐந்து புதிய விளையாட்டுகள் ஐஓசி அமர்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி பேஸ்பால்/சாஃப்ட் பால், கிரிக்கெட் (டி 20), ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகள் 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம் பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளை லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தம் 99 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களில் இருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலிம்பிக்கில் 123 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் கிரிக்கெட் இடம் பெறுகிறது. கடைசியாக 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. இதில் இங்கிலாந்து அணி பிரான்ஸை வீழ்த்தியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment