Published : 16 Oct 2023 07:23 AM
Last Updated : 16 Oct 2023 07:23 AM

பாகிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கிவிட்டார் ரோஹித்: ஷோயப் அக்தர் பாராட்டு

அக்தர் | கோப்புப்படம்

இஸ்லாமாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நொறுக்கிவிட்டார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 63 பந்துகளில் 86 ரன்களை விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இதில் 6 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இதையடுத்து அவருக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரும், ரோஹித் சர்மாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:

உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மிக மோசமான முறையில் விளையாடியது. பாகிஸ்தான் அணியினரின் செயல்பாடுகள் மோசமாக இருந்தது என்பதை விடவும் பெரிய ஏமாற்றத்தை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அளித்தது என்றே நான் கூற வேண்டும். பாகிஸ்தான் அணியை இந்திய வீரர்கள் நசுக்கிவிட்டார்கள் என்று கூறும் அளவுக்குத்தான் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் இருந்தன.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒன்-மேன் ஆர்மியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆக்ரோஷமான ரோஹித் சர்மாவை நம்மால் பார்க்க முடியவில்லை. ரோஹித் சர்மாவிடம் இல்லாத ஷாட்களே கிடையாது என்று புகழும் அளவுக்கு அவர் விளையாடினார். அவர் ஒரு முழுமை யான பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பதை இந்த ஆட்டத்தை நாம் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.

அருமையான வெற்றியைப் பெற்று இந்திய கிரிக்கெட் அணி ஒரு முழுமையான அணியாக காட்சியளிக்கிறது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு தாக்குதலை, எல்கேஜி பயிலும் மாணவர்களை எதிர்த்து விளையாடுவது போல் விளையாடி மிரட்டிவிட்டார் ரோஹித் சர்மா. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, ரவூஃப் ஆகியோரின் பந்துகளை அவர் சிதறடித்தார். இந்த அதிரடி இன்னிங்ஸை நான் ரோஹித் சர்மாவின் கம்பேக் இன்னிங்ஸ் என்று கூற முடியும்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை மொத்தமாக சிதறடித்து, கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து செல்லத் தேவையில்லை என்று ரோஹித் சர்மா நிரூபித்துவிட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறு ஷோயப் அக்தர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x