Published : 16 Oct 2023 06:31 AM
Last Updated : 16 Oct 2023 06:31 AM
அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழு முன்னாள் தலைவர், முன்னாள் கேப்டன், முன்னாள் தொடக்க ஆட்டக்காரர், வர்ணனையாளர் என பன்முகம்கொண்டவர் ரமீஸ் ராஜா. நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மிக மோசமாக விளையாடியதாக ரமீஸ் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே பிரகாசிக்க வில்லை. இதனால் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.இந்தத் தோல்வி அணிக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். அணி வீரர்களை நிச்சயம் காயப்படுத்தும். இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக, இந்தியாவிலேயே விளையாடும்போது அதற்கேற்ற பலத்தை பாகிஸ்தான் வீரர்கள் காட்டியிருக்க வேண்டும்.
கடந்த நான்கைந்து ஆண்டுகளாக, பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக வெற்றிகளைக் குவித்து வந்துள்ளது.பாபர் அஸம், சிறப்பாக அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். ஆனாலும் நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்டனர்.போட்டியில் எதிரணியை உங்களால் வெல்ல முடியவில்லை என்றால், குறைந்தபட்ச அளவுக்கு எதிர்ப்பையாவது காட்டியிருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் அணியால் அதைச் செய்ய முடியவில்லை. இந்திய அணியிடம் முழுவதுமாக சரண் அடைந்துவிட்டது.இதுதான் நிஜம். இதற்கு மாற்று வழியை பாகிஸ்தான் அணியினர் கண்டுபிடிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியை, இந்திய அணி வென்று வந்துள்ளது. மிகவும் அழுத்தத்தைத் தரக்கூடிய போட்டி என்று உணர்ந்திருந்தும், அதை இந்திய வீரர்கள் எளிதாகக் கையாண்டனர். அதைச் செய்ய பாகிஸ்தான் வீரர்கள் தவறிவிட்டனர்.
இனி அடுத்து வரும் போட்டிகளில் பாகிஸ்தான் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, எஞ்சிய போட்டிகளின் மீது கவனத்தை அவர்கள் திருப்ப வேண்டும்.பாபர் அஸம் போன்ற மூத்த வீரர்கள், அணி வீரர்களுக்கு வழிகாட்டி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT