Published : 15 Oct 2023 11:32 AM
Last Updated : 15 Oct 2023 11:32 AM
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று (சனிக்கிழமை) நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது பாக்., வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக பார்வையாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் கீழ்த்தரமானது என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 6 சிக்சர்களை பறக்க விட்டு 63 பந்துகளில் 86 ரன்களை விளாசினார். ஸ்ரேயாஸும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி நடக்கும்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த சிலர் அவரை நோக்கி 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷம் எழுப்பினர்.
இதனை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியா அதன் விளையாட்டுத்தன்மைக்கும், விருந்தோம்பலுக்கும் பெயர்பெற்ற நாடு. இருப்பினும் நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று பாகிஸ்தான் வீரருக்கு நேர்ந்தது ஏற்புடையது அல்ல. அது மிகவும் கீழ்த்தரமானது. விளையாட்டு என்பது தேசங்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்க வேண்டும். சகோதரத்துவத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும். அதை வெறுப்பைப் பரப்பப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது." என்று தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
India is renowned for its sportsmanship and hospitality. However, the treatment meted out to Pakistan players at Narendra Modi Stadium in Ahmedabad is unacceptable and a new low. Sports should be a unifying force between countries, fostering true brotherhood. Using it as a tool… pic.twitter.com/MJnPJsERyK
— Udhay (@Udhaystalin) October 14, 2023
சமூகவலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் நடந்த சம்பவத்தைக் கண்டித்து வருகின்றனர். அதில் ஒரு எக்ஸ் பயனர், நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தவை எல்லாமே சில மோசமான ரசிகர்களின் தந்திரமான செயல்கள். இதுபோன்ற செயல்கள் மூலம் வீரர்களை வீழ்த்த நினைப்பது கீழ்த்தரமானது. அடுத்த 10 நாட்களில் சென்னையில் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளை விளையாடுகிறது. சேப்பாக் வரும் ரசிகர்கள் அகமதாபாத்தில் நடந்ததற்கு மாறாக பாகிஸ்தான் வீரர்களை அன்பால் வரவேற்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் இங்கே விளையாட வந்திருக்கிறார்கள். அதற்கான மரியாதையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
முன்னதாக நேற்றைய ஆட்டத்தின்போது பாபர் ஆசம் டாஸ் நிகழ்வில் பேசும்போதும் மைதானத்தில் இருந்தவர்கள் சிலர் இடையூறு செய்தனர். ஆட்டம் முடிந்தபின்னர் விராட் கோலி தனது கையொப்பம் இட்ட ஜெர்சியை பாபர் ஆசமுக்கு பரிசாக வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT