Published : 15 Oct 2023 06:10 AM
Last Updated : 15 Oct 2023 06:10 AM
மும்பை: 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த உரிமை கோருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) கூட்டம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இதற்கு முன்பு 1983-ல் ஐஓசி கூட்டம் நடைபெற்றிருந்தது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஐஓசியின் 141-வது கூட்டம் பிரதமர் மோடி நேற்று முறைப்படி தொடங்குவதாக அறிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் இந்தியர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு இந்தியா உரிமை கோரும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா செய்யும். அதற்கு முன்னதாக 2029-ல் இளையோர் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விரும்புகிறது. இதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்யும். இதற்காக ஐஓசி-யின் ஆதரவை இந்தியா நாடும்.
ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவது என்பது 140 கோடி இந்திய மக்களின் கனவு. நாட்டு மக்களின் கனவை நனவாக்க அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்ற விரும்புகிறோம். விளையாட்டின் உணர்வு என்பது உலகளாவிய விஷயமாகும். விளையாட்டில் தோல்வியாளர்களே கிடையாது. விளையாட்டில் வெற்றியாளர்கள், கற்றுக் கொள்பவர்கள் மட்டுமே உள்ளனர். விளையாட்டு மனித குலத்தை மேம்படுத்துகிறது. யார் சாதனைகளை முறியடித்தாலும், அனைவரும் அதை வரவேற்கின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஐஓசி தலைவர் தாமக் பாக் பேசும்போது, “பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று வரும் இந்தியா, விளையாட்டிலும் நல்ல வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஒலிம்பிக் சமூகமும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளின் செயல்திறனைப் பார்த்து பெருமைப்படலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT