Published : 14 Oct 2023 05:31 PM
Last Updated : 14 Oct 2023 05:31 PM
அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 191 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 12-ஆவது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பாகிஸ்தானின் ஓப்பனர்களாக அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். பொறுமையாக ஆட்டத்தை தொடங்கியவர்கள், 7-ஆவது ஓவரில் ஆளுக்கு 18 ரன்களைச் சேர்த்த நிலையில் அணியின் ஸ்கோர் 37 ஆக இருந்தது.
8-ஆவது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப் உடைக்கப்பட்டது. முஹம்மது சிராஜ் வீசிய பந்தில் முஹம்மது ஷபிக் எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி 20 ரன்களில் வெளியேறினார். அடுத்து களத்துக்கு வந்தார் கேப்டன் பாபர் அஸம். 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் 49 ரன்களைச் சேர்ந்திருந்தது. இந்த ஆண்டில் பாகிஸ்தான் விளையாடிய 18 ஒருநாள் போட்டிகளில் பவர் ப்ளேயில் அந்த அணி சார்பில் யாரும் சிக்சர்கள் விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6 ஃபோர்களை விளாசி 36 ரன்களுடன் களமாடிக்கொண்டிருந்த இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை 13-ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா கைப்பற்றியது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல். அவரைத் தொடர்ந்து பாபர் அஸம் - முகமது ரிஸ்வான் பாட்னர் ஷிப் அமைத்து நிதான ஆட்டத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 57 பந்துகளில் அரைசதம் கடந்த பாபர் அஸமை 29-ஆவது ஓவரில் சிராஜ் போல்டாக்கினார். அவ்வளவு தான். அடுத்தடுத்து பாகிஸ்தான் தனது வேகத்தை இழக்கத் தொடங்கியது.
சவுத் ஷகீல் 6 ரன்கள், இப்திகார் அகமது 4 என 33-ஆவது ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தான். ரிஸ்வான் நம்பிக்கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஓவரிலேயே பும்ரா பந்தில் போல்டானார்.
ஷதாப் கான் 2, முஹம்மது நவாஸ் 4, ஹசன் அலி 12 என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 41 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 189 ரன்களைச் சேர்த்திருந்தது. ஹரிஸ் ரவூஃப்,ஷஹீன் அப்ரிடி இறுதிக்கட்டத்தில் போராடி வந்த நிலையில், ஹரிஸ் ரவூஃப் 2 ரன்களில் அவுட்டாக 191 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. இதன்மூலம் இந்தியாவுக்கு 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தரப்பில் சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT